பழனிசாமியும் செய்யல, ஸ்டாலினும் செய்யல - தொடங்கியது அன்புமணியின் புதிய பயணம்!  - Seithipunal
Seithipunal


தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாளை முதல்  
3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம் செல்கிறார் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் அம்மாவட்டத்தில் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை; குடிக்கவும் நீர் இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்தும் கூட நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த சிக்கலுக்கு இப்போது வரை முழுமையானத் தீர்வு காணப்படவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மை.

தருமபுரி மாவட்டத்தின் மொத்த வேளாண்மை நிலப்பரப்பில் 45 விழுக்காடு மட்டும் பாசன வசதி பெற்றுள்ளது; கிட்டத்தட்ட இதே அளவிலான மக்களுக்குத் தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும்  வழங்கப்படுகிறது. இந்த சிக்கலுக்கான தீர்வு தான் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டமாகும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும். அதேபோல், மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு, ஃபுளோரைடு அடர்த்தி குறையும். கூடுதலாக  15 லட்சம் மக்களுக்கு புளோரைடு கலக்காத குடிநீர் கிடைக்கும். அதன்மூலம் தருமபுரி மாவட்ட மக்களை தாக்கி வரும் ஃபுளுரோசிஸ் சிக்கலுக்கும் நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும்; வேலைவாய்ப்பு பெருகும். தருமபுரி மாவட்ட மக்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டியிருக்காது. இத்தகைய சிறப்பான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே குரல் கொடுத்து வருகிறேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோரி கையெழுத்து இயக்கத்தை 19.09.2018 அன்று தருமபுரியில் தொடங்கி வைத்தேன்; இத்திட்டத்திற்காக 10.30 லட்சம் கையெழுத்து பெற்று, அவற்றை 05.03.2019 அன்று அன்றைய  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வழங்கினேன். எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என கொள்கை அளவில் ஒப்புக்கொண்டார். இத்திட்டத்தை செயல்படுத்துவதாக 7 முறை உறுதியளித்தார். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த போதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனாலும், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது ஆகும். ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் எல்லா நீர்நிலைகளுக்கும் நீரை கொண்டு செல்ல முடியும். இத்திட்டத்திற்கு மொத்தமாகவே 3 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். காவிரியில் ஆண்டுக்கு சராசரியாக 100 டி.எம்.சி   தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இத்திட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்தத் திட்டம் குறித்து தருமபுரி மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும்  நாளை (19.08.2022) வெள்ளிக்கிழமை ஓகனேக்கலில் தொடங்கி 3 நாட்களுக்கு பிரச்சார எழுச்சி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி, சோலைக்கொட்டாய், கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொம்மிடியில் நடைபயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன்.

உன்னத நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து, அனைத்து தரப்பு  மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தருமபுரி மாவட்ட மக்களின் நலனையும், அங்குள்ள சூழலையும் கருத்தில் கொண்டு தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என அன்புமணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

anbumani start walk campaign in Dharmapuri for water issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->