2வது சம்பவம்... திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை! ஆதாரத்துடன் ஆண்ணாமலை ஆவேசம்!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin School issue
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம்.
இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இது போல எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், அமைச்சர் திரு. பெரியசாமி கூறியிருந்தார். பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் மொத்தம் ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 2497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன. நாங்கள் கேட்பதெல்லாம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால் பல நாட்கள் கடந்தும் இதுவரை அதற்கு பதில் இல்லை.
திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்கிறோம். உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin School issue