சென்னை: கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை போலீஸே விடுதலை செய்த கொடூரம் - அண்ணாமலை கடும் கண்டனம்!
BJP Annamalai Condemn to TN Police MDK Govt Ayanavaram Incident
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்?
தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் முக ஸ்டாலின் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்" என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to TN Police MDK Govt Ayanavaram Incident