அமைச்சரவை மாற்றம்? - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
Cabinet reshuffle Chief Minister MK Stalin
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும், வெள்ளை அறிக்கைகள் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலத்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டு காலத்தில் வந்த முதலீடுகள் பற்றி நான் விளக்கமாக சொல்லி இருக்கிறேன் என்றும், அது மட்டுமல்லாமல், தொழில் துறை அமைச்சரும் புள்ளி விவரங்களோடு விளக்கி இருக்கிறார். அதை எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்து தெரிந்து கொள்ள சொல்ல வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு போனதாக சொன்னார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதை சொன்னால் உள்ளபடியே அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும் என்று கூறினார்.
பின்னர் அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லி இருந்தீர்கள் ; அமைச்சரவை மாற்றம் நிகழுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மு.க ஸ்டாலின், நாங்கள் திமுக.. சொன்னதை தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம். இந்த கேள்விக்கான பதிலை நான் ஒரே வரியில் சொல்லி விடுகிறேன். திமுகவின் 75வது ஆண்டு விழா பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து மாற்றங்களும் ஏற்படும் சூழல் உருவாகும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
English Summary
Cabinet reshuffle Chief Minister MK Stalin