ஏடிஜிபி கல்பனா நாயக்கை கொலை செய்ய முயற்சி! மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!
Central Minister L Murugan Condemn to DMK Govt ADGp Issue TNPolice
தமிழக காவல்துறை ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்களின் அலுவலகத்தில், கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த தீ விபத்தானது, தன்னை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று அவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி-யாக கல்பனா நாயக் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் பதவியேற்பதற்கு முந்தைய காலத்திலும், பதவி வகித்த காலத்திலும், காவல்துறை துணை ஆய்வாளர் நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அவர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
காவல்துறை பணியிடங்களை நியமனம் செய்வதில் ஏற்படுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர முற்படும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் தீ விபத்து முயற்சியோ என்ற அச்சம் எழுகிறது.
இச்சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவருக்கும், தலைமைச் செயலருக்கும் விவரமாக புகார் கடிதம் அளிக்கப்பட்டும், இன்று வரை அதற்கான விசாரணை மேற்கொண்டிருப்பதாக தெரியவில்லை. மாறாக, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதோடு, துறை சார்ந்த பணிகளில் புறக்கணிக்கப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது.
தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள காவல்துறையினருக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது காவல் துறையை பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடமை. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளர்.
இதற்கிடையே, ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட சதி இல்லை என்று டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் ஏடிஜிபி கல்பனா நாயக் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Central Minister L Murugan Condemn to DMK Govt ADGp Issue TNPolice