நாற்காலிகள் பறக்க பறக்க.. விழுந்த அடிகள்.. பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கைகலப்பு..!!
Clash in Ramanathapuram district BJP office bearers meeting
பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்ட ராமநாதபுரம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கைகலப்பு ..!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 27ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகளை கூண்டோடு கலைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி.முருகேசன் என்பவரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனால் முன்னாள் மாவட்ட தலைவர் டி.எம்.டி கதிரவன் மற்றும் தரணி.முருகேசன் தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் தேனீக்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்த தரணி.முருகேசன் வாழ்த்து பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். முன்னாள் பாஜக மாவட்ட தலைவரின் ஆதரவாளர்கள் சிலர் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தேனீக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இன்று ராமநாதபுரம் மாவட்ட பாஜகவினர் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பொன்.பாலகணபதி, ராமநாதபுரம் மாவட்ட புதிய பாஜக தலைவர் தரணி.முருகேசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் டி.எம்.டி கதிரவனுடைய ஆதரவாளர் பாலா என்கிற நபர் தன்னுடன் இரண்டு நபர்களை அழைத்துச் சென்று ஆலோசனை கூட்டம் நடைபெற்ற அரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சூழலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் தரணி.முருகேசனின் ஆதரவாளர்கள் முன்னாள் தலைவர் டி.எம்.டி கதிரவனின் ஆதரவாளர் பாலா மற்றும் அவருடன் வந்தவர்களை நாற்காலிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாலா மற்றும் அவருடன் வந்த இரு நபர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற அரங்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Clash in Ramanathapuram district BJP office bearers meeting