நான் ஏற்கனவே "I Dont care" என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள் - முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
cm mk stalin letter to tn people july 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
"கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்டசெய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும்நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்லசெய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமையன்று குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதே நாளில் சென்னை கலைவாணர் அரங்கில் 'தமிழ்நாடு திருநாள்' என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன். தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்துவருகிறோம். அதில் ஒரு பெருமையாகத்தான், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையானஉடல்நலத்துடன் உங்களில் ஒருவனான நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சைவத் தமிழ்நெறி பாடிய திருநாவுக்கரசர் கூறியது போல, 'என் பணி மக்கள் தொண்டாற்றுவதே' என்று உறுதியேற்று செயலாற்றி வருகிறேன். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனை அடைய வேண்டுமென்றால் இப்போது உழைப்பதை விடவும் இன்னும் அதிகமாக உழைத்திட வேண்டும்.
நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைத்திட வேண்டும். ஆளுங்கட்சி என்ற முறையில் கழகத்தினர் ஒவ்வொருவருக்கும் கூட அந்தப் பொறுப்பு இருக்கிறது. உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும்.
நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சனச் சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக் கொண்டு, அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். நம்மைத் தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம்.
நான் ஏற்கனவே திருவண்ணாமலையில் சொன்னபடி I Dont care என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள். வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்" இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
cm mk stalin letter to tn people july 2022