'ஹாப்பி பர்த்டே உதயண்ணா' விவகாரம்: தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் 'சையது  மெட்ரிகுலேஷன்' பள்ளியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை வரவழைத்து 'உதய் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று கட்டாயப்படுத்தி சொல்ல வைத்திருப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக ஸ்டார்ட்அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில், "தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் (செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) 25/11/2024 அன்று நடைபெற்ற தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டமும், அந்த சமயத்தில் திமுக நிர்வாகிகளின் வருகைக்காக மாணவச் செல்வங்கள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில், பத்திரிகை, தொகைக்காட்சி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே சாதி, மத பாகுபாடு கூடாது என்று எப்படிச் சொல்கிறோமோ, அதேப்போலதான் அரசியலும் இருக்கக் கூடாது என்பதே பொதுவான கருத்து. இப்படி இருக்கையில், அரசியல் கட்சியைச் சேர்ந்தவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தனியார் பள்ளி மைதானத்தில் வைத்து நடத்தியதுடன், ஆயிரத்துக்கும் அதிகமான சிறார்களை மணிக்கணக்கில் காக்க வைத்து, யோகா செய்யும்படி கூறியுள்ளார்கள். மேலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, 'ஹாப்பி பர்த்டே உதயண்ணா' என்று சொல்ல வைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப் பட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர் ஒருவருக்கு தலா ரூ.500 வரை வசூலிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. 

500 ரூபாய் வரை வசூலித்துக்கொண்டு ரூ.50 மதிப்புள்ள ஷீல்டு, அதுவும் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, ஜெயபாலன் படம் போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. துணை முதல்வரின் பிறந்த நாளைக் கொண்டாட மாணவர்களிடம் பணம் வசூலித்தது மிகவும் மோசமான செயல். சில பள்ளிகள் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் தனியாக பணம் வசூலித்துள்ளனர். பணத்தை வசூலித்தவர்கள் சரியான உணவு வசதி, தண்ணீர் வசதி கூட ஏற்பாடு செய்யவில்லை என்பது வேதனையான ஒன்றாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், மாணவர்களை வெயிலில் நிற்க வைத்தவர்கள் மீதும், இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சியினை நடத்துவதற்கு அனுமதி அளித்த பள்ளியின் மீதும் துறை ரீதியிலான கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யோகா போட்டி என்ற பெயரில் மாணவர்களிடம் கட்டாய வசூல் செய்த அரசியல் கட்சியினர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் 'சையது  மெட்ரிகுலேஷன்' பள்ளியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை வரவழைத்து 'உதய் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று கட்டாயப்படுத்தி சொல்ல வைத்திருப்பது குரூரமான செயல். பள்ளிக் குழந்தைகளை திமுக வின் மாவட்ட செயலாளரின் வறுபுறுத்தலால் வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தி, வாழ்த்து சொல்ல வைத்திருப்பது திராவிட மாடல் ஃபாஸிச அரசின் கொடுங்கோல் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. திமுக வின் அராஜக, அநியாய அரசியலை, கோர முகத்தை வெளிப்படுத்துகிறது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடுவது குறித்து நமக்கு எந்த எதிர்ப்போ, மறுப்போ இல்லை. ஆனால் பள்ளிக் குழந்தைகள் கொண்டாடுகிற அளவிற்கு, வாழ்த்து சொல்கிற அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் உலகம் போற்றும் உத்தமத் தலைவரும் அல்ல, இந்த நாட்டுக்காக தியாகம் செய்த தியாக சீலர்களில் ஒருவரும் அல்ல, தமிழுக்கு, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மனிதர்களில் ஒருவரும் அல்ல. 

அரசியலில் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்ட ஒரு அரசியல் வாரிசு - அவ்வளவு தான். தலைவர்கள் உருவாக வேண்டுமேயன்றி, உருவாக்கப்படக் கூடாது. குழந்தைகளின், அந்த குழந்தைகளை பெற்றவர்களின் மனநிலையை சற்றேனும் சிந்தித்து பார்த்தார்களா? இது தான் சமூக நீதியா? இது தான் சுயமரியாதையா? இது தான் கண்ணியமா? இது தான் பகுத்தறிவா?

முதலமைச்சருக்கோ, துணை-முதலமைச்சருக்கோ தெரியாமல் இந்த குற்றம் நிகழ்ந்திருந்தால், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மகாவிஷுனு விவகாரத்தில், 'இது என் ஏரியா, சும்மா விட மாட்டேன்' என்று கூறிய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே, இதோ, உங்கள் ஏரியாவில் ஒரு சிலர் வந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்பில்லாத ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களை சும்மா விடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK DyCM Udhay Birth Day BJP Complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->