அன்பு மாமா உலகிலே அவதரித்த புனித நாள் - முதல்வர் ஸ்டாலின் விடுத்த வாழ்த்துச் செய்தி! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளர். இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

"இன்று மிகவும் சிறந்த நாள்;
எங்கள் நேரு பிறந்தநாள்;
அன்பு மாமா உலகிலே
அவதரித்த புனித நாள்!
அன்று சிறிய குழந்தையாய்,
அலகாபாத்தில் பிறந்தவர்
என்றும் நமது நெஞ்சிலே
இருந்து வாழும் உத்தமர்!"

என நேரு அவர்களைப் போற்றிப் பாடினார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. பண்டித நேரு அவர்கள் குறித்து "நேருவும் குழந்தைகளும்", "நேரு தந்த பொம்மை" ஆகிய நூல்களை இயற்றியதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களைப் பாடியுள்ள அவரது நூற்றாண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த "தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021" கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம். எந்தக் குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக்கூடாது என்பதுதான் அரசின் இலக்கு,

குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்பப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான கலை. பண்பாட்டு வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் ஏட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், சிறார் திரைப்பட விழா அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.

இப்படியான மகிழ்ச்சியான கல்வி கற்றல் நம் பள்ளிகளில் உருவாகி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு மாற்றம். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு வளரவும், சகோதரத்துவமும் நட்புணர்வும் தழைக்கவும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அனைத்தையும் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை. அனைத்துக் குழந்தைகளுக்கும் அவற்றை உரித்தாக்க, தமிழ்நாடு அரசு இந்தக் குழந்தைகள் நாளில் உறுதி ஏற்கிறது.

குழந்தைகள் எதிர்கால தூண்கள் என்பதை கருத்திற்கொண்டு. கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும்.

இளம் சிறார்கள் அனைவருக்கும் என் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். "குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mkstalin wish childrens day 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->