ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்திய திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்!
Congress and VCK Leaders say about Jayalalidha
ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்திய திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்!
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி: ஜெயலலிதா அவர்களோடு அரசியல் ரீதியாக எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு பெண்ணாக அசைக்க முடியாத மன உறுதியோடு, எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக,தமிழ்நாட்டின் முதலமைச்சராக இறுதிவரை அரசியல் களத்தில் வலிமையான சக்தியாக நின்றவர்.
ஒரு பெண்ணாக அரசியல் களத்தில் நிற்பது எளிதல்ல. இந்த ஆணாதிக்க அரசியல் களத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வொரு பெண்ணும் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டங்களே பெண்களை வலிமையானவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும், எவ்விதமான சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் உருவாக்குகிறது.
அந்த வகையில் ஒரு பெண்ணாக ஜெயலலிதா அவர்களின் போராட்டங்களையும், தைரியத்தையும்,மன உறுதியையும் அவரது நினைவு நாளான இன்று நினைவு கூற விரும்புகிறேன். அவருக்கு எனது அஞ்சலி!
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா : சமூகத்தைப் போல் அரசியலிலும் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த களத்தில் களமாடிய ஓர் பெண் ஆளுமை. அறிவு மற்றும் தைரியத்தை மட்டுமே பற்றிப் பிடித்து தனக்கு எதிரான அனைத்து சூழ்ச்சிகளையும் வென்று காட்டிய மகத்தான சாதனையாளர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
தமிழ்நாடு தேர்தல் வரலாற்றிலேயே 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி அதில் வெற்றியும் கண்ட ஒரே ஆளுமை என்று பெயர்போன தலைவி.
தமிழ்நாடு நலன்களையும் பெற வேண்டிய உரிமைகளையும் ஒன்றிய அரசிடம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத சமரசமற்ற இரும்புப் பெண்மணி, மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நினைவுநாளில் அவரின் போற்றத்தக்கப் பங்களிப்புகளை நினைவுகூர்வோம்.
English Summary
Congress and VCK Leaders say about Jayalalidha