தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார்..? டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை..!!
Delhi Congress Consulting about TN Congress President today
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தின விழாவையொட்டி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை பயணத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நடக்கும் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்காக கார்த்திக் சிதம்பரம் தீவிரம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
டெல்லியில் தங்கியுள்ள ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை பதவி குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். ஆனால் யாரையும் சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கிறிஸ்மஸ் விழாவிற்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற "கையோடு கைகோருங்கள்" நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் "அனைத்து பொறுப்புகளும் மாற்றத்திற்குரியது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை மாற்றினால் ஏற்றுக் கொள்வோம்" என பேசி இருந்தார்..
அதேபோன்று டெல்லி காங்கிரஸ் தலைமையில் சில நிர்வாகிகள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக எம்.பி ஜோதிமணியை பரிந்துரைத்துள்ளனர். அதேபோன்று எம்எல்ஏ விஜயதாரணியும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் தலைமைக்கு பெண் நியமிக்கப்பட்டால் தமிழக மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை பிறக்கும் என டெல்லி காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் மாநாடு குறித்து ஆலோசனை செய்ய சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஜோதிமணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கலாம் என கே.சி வேணுகோபால் பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Delhi Congress Consulting about TN Congress President today