ஒரு வருஷமா இருக்காமே! தமிழக அரசுக்கு இது தெரியாதா? நிலக்கரி சுரங்கம் விவகாரத்தில் அதிமுக உறுப்பினர் பகீர்!
Delta Coal Mine Scheme ADMK Kamaraj Assembly Speech
டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அதிமுக உறுப்பினர் காமராஜ் பேசியதாவது, "திமுக ஆட்சி காலத்தில் அன்றைக்கு மீத்தேன் எடுப்பதற்கு புரிந்தோணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது.
அதனை தடுத்து நிறுத்துவதற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீண்ட சட்ட போராட்டத்தை நடத்தினார்கள். 2013 ஆம் ஆண்டு அதற்காக இடைக்கால தடை பெற்றார்கள்.
2015 ஆம் ஆண்டு நிரந்தர தடையையும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெற்று தந்தார்கள். அதற்கு பின்னால் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்ணன் அவர்கள், காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தைத் தவிர வேறு எந்த தொழிற்சாலையும், ஹைட்ரோ கார்பனோ அல்லது வேற விதமான எந்த தொழிற்சாலையும் வரக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில், அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
அதற்காக காவேரி காப்பாளர் என விவசாய சங்க பிரதிநிதிகள் பட்டதை வழங்கினார்கள். ஆனால் இன்றைக்கு அந்த சட்டப்பிரிவு என்ன சொல்கிறது என்றால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் எந்த ஒரு புதிய திட்டத்தையும், புதிய செயல்பாட்டையும், எந்த ஒரு தனி நபரும், நிறுவனமோ மேற்கொள்ளக்கூடாது என்று சட்டம் அழுத்தமாக சொல்கிறது.
இருந்த போதிலும் இந்த நிலக்கரி ஏலம் போடப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி ஏலம் ஓராண்டாக நடைமுறையில் இருந்ததாக சொல்கிறார்கள்.
இந்த இந்த ஓராண்டாக தமிழக அரசின் கவனத்திற்கு வராமல் எப்படி போனது என வியப்பாக இருக்கிறது. மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, காவேரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கிய இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற முறையில் உங்களை கேட்கிறேன், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட திமுக இதற்கு அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
Delta Coal Mine Scheme ADMK Kamaraj Assembly Speech