இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால்...முதல்வர் ஸ்டாலினின் இரண்டாது கடிதம்! - Seithipunal
Seithipunal


"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று கேள்வி எழுப்பிய பாஜகவினருக்கு, "தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்" என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.

இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?” என்று இங்கேயுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாகத் தமிழ் மீது இருந்திருக்க வேண்டும்.

நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து நின்று 1937 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மையாக நின்றனர்.

சென்னை மாகாணமாக இருந்த அன்றைய தமிழ்நாடெங்கும் ஆதிக்க இந்திக்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநாடுகள் நடத்தப்பட்டன. துறையூரில் 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்றவர் 28 வயது இளைஞரான அறிஞர் அண்ணா அவர்கள்.

இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய அன்றைய இராஜாஜி அரசின் செயலை வரவேற்றதுடன், மேல்நிலை வகுப்புகளில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் தலையங்கங்கள் எழுதப்பட்டன.

காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அவர்கள், “வருணாசிரம தர்மம் காப்பாற்றப்படவும், கிராம ராஜ்ஜியம் ஏற்படவும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்" என்று கூறினார். இவற்றையெல்லாம் எதிர்த்துதான் பெரியார் தலைமையில் போராட்டக் களம் புகுந்தனர் தமிழர்கள்.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசினுடைய திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு முழுவீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.

உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், கழக மாணவரணியின் முன்னெடுப்பில், ஆர்ப்பாட்டம் நடத்திய செய்திகளைத் தொலைக்காட்சிகள் வாயிலாகப் பார்க்க முடிந்தது.

ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்திய கண்டனப் பேரணி என்பது, சென்னை சௌகார்பேட்டை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் 1938-ஆம் ஆண்டு ஆண்களும் பெண்களுமாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் இன்றைய பதிப்பு போ இருந்தது.

அப்போது நடந்த போராட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீத்தம்மாள் ஆகிய 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீத்தம்மாள் தனது மூன்று வயது மகள் மங்கையர்க்கரசி, ஒரு வயது மகன் நச்சினார்க்கினியன் ஆகியோருடன் கைதாகி சிறை சென்றார் என்பது திராவிட இயக்கத்தின் தியாக வரலாறு.

இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம். சட்டத்தின் முன்பும் நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழைக் காப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK CM Stalin Hindi Issue BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->