பாமகவின் கூட்டணி விவகாரம் | நீங்களே எதையாவது போடுவீங்களா? - அன்புமணி இராமதாஸ் அதிரடி பேட்டி!
Dr Anbumani Ramadoss Say About PMK Plan For 2024 2026 election
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "கூட்டணி குறித்து நான் எங்கேயும் பேசவில்லை. அதற்குள் நீங்களே ஒரு கூட்டணி இருக்கா? இல்லையா? என்பதை போட்டு உள்ளீர்கள்.
நான் சொன்னது என்ன என்றால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 பாராளுமன்ற தேர்தலில் அமைப்போம் என்று தான் சொல்லி இருக்கிறேன்.
இதில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்களுடைய நோக்கம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குண்டான யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது எடுப்போம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், "கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா அண்மையில் தவறான மூட்டு அறுவை சிகிச்சை அளித்ததால் உயிரிழந்திருக்கிறார். அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் முழுமையாக விசாரணை நடத்தி, தவறு நடந்திருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில், சரியான அறுவை சிகிச்சை தான் மாணவி பிரியாவுக்கு அளிக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார். ஆனால் முழுமையான ஆய்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. எப்படி இருந்தாலும் சரி, மாணவி பிரியாவின் உயிர் பரிபோனது, எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் நானும் ஒரு மருத்துவர்.
மாணவி பிரியாவின் குடும்பத்தினருக்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனி நடக்கக் கூடாது.
தமிழக அரசின் (ஆர்த்தோ) எலும்பு சம்பந்தமான சிகிச்சையை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்பது தமிழக அரசுக்கு நான் கொடுக்கக் கூடிய ஒரு ஆலோசனை" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About PMK Plan For 2024 2026 election