மிக ஆபத்து | உடனே தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி!
Dr Anbumani Ramadoss Say About Social Justice TNGovt Order
தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
நிரந்தரப் பணிகளையும், சமூக நீதியையும் ஒழிப்பதற்கு வழிவகுக்கக் கூடிய தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை செயல்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ. ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை 18.10.2022-ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக தில்லியைச் சேர்ந்த பொதுக்கொள்கை மையம் (Centre for Policy Research) நியமிக்கப்பட்டிருக்கிறது. மனிதவள சீர்திருத்தக் குழுவுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணி வரம்புகள் தான் அச்சமளிப்பவையாகவும், கவலையளிப்பவையாகவும் உள்ளன.
அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கதும், அவசியமானதும் ஆகும். அதே நேரத்தில் ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்தல், தனியார் முகமைகள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையில் பணியாளர்களை பெறுதல், சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல், முதலில் தற்காலிக பணியாளர்களாக நியமித்து பின்னர் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நிலைப்பு வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது பற்றி பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது மனிதவள சீர்திருத்தக்குழுவுக்கு தமிழக அரசு அளித்திருக்கும் பணிகள் ஆகும்.
இதற்கான பரிந்துரைகளை அடுத்த 6 மாதங்களில் மனிதவள சீர்திருத்தக்குழு அரசிடம் வழங்கி, அவை நடைமுறைபடுத்தப்பட்டால், அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு தானாகவே அழிந்துவிடும். தமிழக அரசு விதிகளின்படி நிரந்தர பணிகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது; தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை.
மனிதவள சீர்திருத்தக்குழுவை அரசு அமைத்திருப்பதன் நோக்கமே பெரும்பான்மையான பணியிடங்களை மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக அடிப்படையிலும், குத்தகை அடிப்படையிலும் நியமிப்பது தான் என்பதால், அந்த நியமனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அது சமூகநீதிக்கு சாவுமணி அடித்து விடும்.
பல்கலைக்கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டி பிரிவு பணியாளர்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்திருக்கிறது. இதே முறையை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும், சி பிரிவு பணிகளுக்கு விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.
இது நடைமுறைக்கு வரும் போது, 90% அரசு பணிகளுக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்; அந்த 90% பணிகளுக்கும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படும் போது இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் சமூகநீதியை சீரழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பதிலாக அந்த பணியிடங்களை ஒழித்து விடலாமா? என்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து 18.08.2022 தேதி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் இனி நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை.
மீதமுள்ள பணியிடங்களும் தற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் தான் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் நிரப்பப்படும் என்றால், அதை விட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. இதை தமிழக அரசு அனுமதிக்கவும் கூடாது.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு முற்றிலும் எதிராக பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதும், நிரந்தர பணியாளர்களுக்கு பதில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கத் துடிப்பதும் அரசுக்கு எந்த வகையிலும் நற்பெயரை பெற்றுக் கொடுக்காது.
இதை உணர்ந்து கொண்டு சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 115-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Social Justice TNGovt Order