அறிக்கை விட்ட 3 மணிநேரத்தில் பாமகவுக்கு கிடைத்த வெற்றி! குட்டு அம்பலமானதும் நாடகமாடிய அண்ணா பல்கலைக்கழகம்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதைக் கண்டித்து  இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தேன். 

அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில்  ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டும் தான்  குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது என்று  அறிவிக்கப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின்  முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டதில் மகிழ்ச்சி தான். ஆனால், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.  

அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட  சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள்  குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது உண்மை. 

அதற்கு நான் கண்டனம் தெரிவித்த பிறகு  எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தான் அண்ணா பல்கலைக்கழகம் அதன் முடிவை மாற்றிக் கொண்டது.

ஆனால்,  நிதிக்குழு தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்,  சுற்றறிக்கையில் தான் ஆசிரியர்கள் என்ற சொல் தவறுதலாக இடம் பெற்று விட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த  அண்ணா பல்கலைக்கழகம் முயன்றுள்ளது.  

அதுமட்டுமின்றி அதன் தவறு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடி ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பழைய சுற்றறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி கண்டித்திருக்காவிட்டால், ஆசிரியர்கள்  நியமனத்தில் குத்தகை முறை திணிக்கப்பட்டிருந்திருக்கும். 

ஆனால், குட்டு அம்பலமான பிறகு எதுவுமே  நடக்காதது  போன்று அண்ணா பல்கலைக்கழகம்  நாடகமாடுகிறது.  இது தவறு. ஓர் உயர்ந்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to Anna University


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->