தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - அனபமணி இராமதாஸ்!
Dr Anbumani ramadoss Say About TN Fishermans safety
தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படை கொடூரத் தாக்குதல்: மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!
தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிப்பது, கல்வீசித் தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது என தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன!
சிங்களக் கடற்படையினரின் அட்டகாசங்களுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், மாநில அரசும் கண்டித்தும் கூட சிங்களப் படையினர் அவர்களின் அத்துமீறலை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. இது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் ஆகும்!
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani ramadoss Say About TN Fishermans safety