மீண்டும் ஒரு பலி, இன்னும் எத்தனை உயிர்போகும்., தமிழகம், புதுவையில் தனி சட்டம் இயற்ற கோரும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!
Dr ANBUMANI RAMADOSS SAY Ban Online Gambling
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்க புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தாம்பரம் ஆனந்தபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் தமிழகம் மற்றும் புதுவையில் தற்கொலைகள் தொடர்கதையாகி விட்டன.
தமிழ்நாட்டில் சூதாட்டத் தடை சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பிறகு தற்கொலைகள் குறைந்தன. அந்த சட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்த பிறகு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது; தற்கொலைகள் அதிகரித்து விட்டன.
திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு விசாரணை வரவில்லை. அது வரைக்கும் தற்கொலைகள் தொடருவதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்க புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். புதுவை அரசும் அம்மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr ANBUMANI RAMADOSS SAY Ban Online Gambling