தருமபுரி - மொரப்பூர் : தமிழ்நாடு புதிய ரயில் திட்ட மொத்த மதிப்பில் 0.7% மட்டுமே ஒதுக்கியது அநீதி - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் புதிய தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவையான மொத்த மதிபீட்டில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நிதி மட்டுமே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது அநீதியாகும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் நேற்று முன்நாள் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தொடர்வண்டித்துறைக்கு மொத்தம் ரூ. 1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு தொடர்வண்டித்துறைக்கு ரூ.7,114 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒதுக்கீட்டிலும் கூட வழக்கமான செலவுகளைத் தவிர்த்து, தொடர்வண்டித் திட்டங்களுக்காக செலவழிக்கப்படவுள்ள தொகை பாதிக்கும் குறைவு தான். குறிப்பாக தமிழ்நாட்டில் புதிய தொடர்வண்டித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.7910 கோடி செலவில் 871 கி.மீ நீளத்திற்கு 9 புதிய தொடர்வண்டி பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்களுக்காக 2021 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான 15 ஆண்டுகளில் ரூ.575 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. இது மொத்த மதிப்பீட்டில் 10%க்கும் குறைவு தான். 

இத்தகைய சூழலில் தமிழகத்தின் புதிய திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டும் தான் தொடர்வண்டி கட்டமைப்பில் தமிழ்நாடு தன்னிறைவு பெற முடியும். ஆனால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 புதிய திட்டங்களில் இராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.20 கி.மீ தொலைவுக்கு புதிய பாதை அமைக்கும் திட்டத்திற்கு மட்டும் ரூ.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், அத்திப்பட்டு -  புத்தூர், ஈரோடு - பழநி, தருமபுரி - மொரப்பூர், திருப்பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, மதுரை- அருப்புகோட்டை-  தூத்துக்குடி ஆகிய 8 தொடர்வண்டித் திட்டங்களுக்கு அடையாளமாக தலா ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 புதிய தொடர்வண்டித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.59.0008 கோடி என்பது அந்தத் திட்டங்களுக்கான மதிப்பீட்டில் 0.74% மட்டும் தான். இந்த ஒதுக்கீடு போதுமானது அல்ல. தமிழகத்தின் தொடர்வண்டித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி நேரிலும், கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்திய போதிலும் கூட, அத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இவற்றில் 7 திட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறையின் இணை அமைச்சர்களாக இருந்த போது அறிவிக்கப்பட்டவை ஆகும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களில் அனைத்துத் துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்தத் திட்டங்களை பா.ம.க. போராடி கொண்டு வந்தது.

ஆனால், இந்தத் திட்டங்களுக்கு 12 ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, இவற்றில் 5 திட்டங்கள் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பா.ம.க. தான் போராடி அத்திட்டங்களை காப்பாற்றியுள்ளது.

தருமபுரி - மொரப்பூர் புதிய பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தொடர்வண்டித்துறை தயாராக உள்ளது. ஆனால், ஏற்கனவே அந்தப் பாதை அமைக்கப்பட்டிருந்த நிலத்தை தமிழக அரசு தனியாருக்கு வழங்கி விட்டதால், பாதை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்த நிலங்களை அளவீடு செய்து தருவதில் தமிழக அரசுத் தரப்பில் செய்யப்படும் தாமதத்தால் தான் தருமபுரி - மொரப்பூர்  திட்டம் தாமதமாகிறது. இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் திட்டப்பணிகளை விரைவாக செய்ய முடியும்.

தொடர்வண்டித் திட்டங்கள் மாநிலங்கள் மற்றும் மாநிலங்கள் வழியாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை ஆகும். ஒரு மாநிலத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களை செயல்படுத்தாமல் புறக்கணித்து விட்டு, நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. எனவே, தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டி திட்டங்கள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் வகுத்து, அதன்படி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadass say about Tamil Nadu New Rail Projects Allocating value is an injustice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->