தொடர்வண்டி நிலையங்களா... இந்தி திணிப்பு மையங்களா? கொந்தளிப்பில் டாக்டர் இராமதாஸ்!
Dr Ramadoss Condemn For Railway Hindi Issue 291122
தொடர்வண்டி நிலையங்களா... இந்தி திணிப்பு மையங்களா? மறைமுக இந்தித் திணிப்பை கைவிட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது!
மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் தொடர்வண்டி நிலையம் போன்ற இடங்களில் உள்ளூர் மொழியான தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் முதன்மையாக வைக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலம், இந்தியில் வைத்துக் கொள்ளலாம்!
ஆனால், திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும்!
புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Condemn For Railway Hindi Issue 291122