தமிழக மாணவர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்க இந்தி ஆசிரியர்களா? பள்ளி மாணவர்களை சுரண்ட அனுமதிக்காதீர்  - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி (Paper Art Training) அளிக்க தில்லி உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழே தெரியாத வட இந்திய பயிற்சியாளர்களை அரசு பள்ளிகளில் அனுமதிப்பது அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, மாணவர்களை சுரண்டவும் வழி வகுக்கும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் 09.06.2022 தேதியிட்ட செயல்முறைகள் மற்றும் அவற்றின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கடந்த வாரம் பிறப்பித்திருக்கும் ஆணைகளில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வட இந்தியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு காகிதக் கலைப் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உமேஷ்ராய், பூரண்லால், வினோத்குமார், தீபக்குமார் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட பயிற்சியாளர்களில் சிலர் ஆவர்.

பள்ளிக்கல்வித் துறையின் இந்நடவடிக்கை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பது ஒருபுறமிருக்க, மாணவர்களுக்கு பல வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும். முதலில், காகிதக் கலைப் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கு தமிழில் பேசவோ, எழுதவோ வராது. அவர்களுக்கு இந்தி உள்ளிட்ட வட மொழிகள் மட்டுமே தெரியும். அரசு பள்ளிகளின் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்ட ஏழைகள் ஆவர். அவர்களுக்கு இந்தியில் பயிற்சியாளர்கள் அளிக்கும் பயிற்சி புரியாது; இதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.

இரண்டாவதாக வட இந்திய பயிற்சியாளர்களின் நோக்கம் தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களுக்கு காகிதக் கலை பயிற்சி அளித்து அவர்களை அக்கலையில் வல்லுனர்களாக மாற்றுவது அல்ல. மாறாக, காகிதங்களைக் கொண்டு மலர்கள், மரங்கள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை செய்வது எப்படி? என்பது குறித்த புத்தகத்தை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அவர்கள் அச்சிட்டிருக்கின்றனர். 

காகிதக்கலை பயிற்சி வழங்க மாணவர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்சியாளர்கள் தங்களிடமுள்ள புத்தகங்களை மாணவர்களிடம் விற்று பணம் பறிக்கின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாடநூல் வாங்குவதற்கே வசதியற்ற நிலையில் உள்ளனர் என்பதால் தான், அவர்களுக்கு அரசே இலவசமாக பாடநூல்களை வழங்குகிறது. அப்படிப்பட்டவர்களிடம் கட்டாயப்படுத்தி பணத்தை பறித்துக் கொண்டு பயனற்ற புத்தகங்களை திணிப்பது சகித்துக் கொள்ள முடியாத சுரண்டல் ஆகும்.

மூன்றாவதாக, பயிற்சியாளர்களால் வழங்கப்படும் நூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எந்திர மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த நூலில் இருப்பதை தமிழ் மொழியாக்கம் என்று கூறுவதை விட, தமிழ் படுகொலை என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். 

அந்த அளவுக்கு தமிழ் சிதைக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக Cut the roll vertically to the half of it என்ற வாசகம் அந்த புத்தகத்தில் ‘இது பாதிக்கும் என்று பங்கு மையம் வெட்டு’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காகிதச் சுருளை அதன் மையத்தில் செங்குத்தாக வெட்ட வேண்டும் என்பது தான் அந்த புத்தகத்தில் தப்பும் தவறுமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும் மாணவர்கள் காகிதக் கலையை கற்றுக் கொள்வதற்கு பதிலாக தமிழை மறந்து விடுவர் என்பதே எதார்த்தம்.

தமிழக அரசு நினைத்தால் ஒரு ஒன்றியத்திற்கு இரு ஆசிரியர்களை நியமித்து காகிதக் கலையை கற்றுத் தர முடியும். இல்லாவிட்டால் பள்ளி நூலகங்களில் இதற்காக தமிழில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை படிக்கச் செய்தோ அல்லது யு&ட்யூப் காணொலிகளை காட்டியோ மாணவர்களுக்கு காகிதக் கலையை சிறப்பாக பயிற்றுவிக்க முடியும். 

ஆனால், அதை செய்வதற்கு பதிலாக, இத்தகையைக் கலையை கற்பிக்க தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாததைப் போன்று வட இந்தியர்களை வகுப்பெடுக்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் பள்ளிக்கல்வித் துறை விடையளிக்க வேண்டிய வினாவாகும்.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி அவர்களின் திறனை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். ஆனால், இந்தப் பயிற்சி மாணவர்களிடம் பணத்தை சுரண்டி, அவர்களின் மொழித்திறனை சிதைப்பதாக உள்ளது. 

எனவே, வட இந்திய பயிற்சியாளர்களைக் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு காகிதக் கலைப் பயிற்சி அளிக்க வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும்; மாறாக, தமிழ்நாட்டு கலை ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say about Hindi Teachers issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->