தமிழக அரசு அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கண்டிக்கத்தக்கது - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பணிநீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவையை அரசு பெற்றுத் தர வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு முன் பணிநீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும் என்று நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் ஆணையிட்டும் கூட, அதை வழங்க தனியார் நிறுவனம் மறுத்து வருகிறது.

தொழிலாளர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை, இந்த விஷயத்தில் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கண்டிக்கத்தக்கது.

திருப்பெரும்புதூரை அடுத்த பென்னலூர் கிராமத்தில் இங்கோர் ஆட்டோடெக் இந்தியா என்ற தனியார் நிறுவனம் கடந்த 1997 ஆம் ஆண்டில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் பல நூறு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கதவடைப்பு செய்த அந்த நிறுவனம் அதில் பணியாற்றி வந்த 200 க்கும் மேற்பட்ட  தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

ஆனால், அவர்களுக்கு தொழிலாளர்கள் நலச் சட்டங்களின் படி எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்திய அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் சட்டப்படியான தீர்வு வேண்டி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த தொழிலாளர் தீர்ப்பாயம் அவர்களுக்கு இழப்பீடு வழங்க ஆணையிட்டது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இறுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட 187 தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையாக ரூ.36.05 கோடி வழங்க ஆணை பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவையும் செயல்படுத்த இங்கோர் நிர்வாகம் முன்வரவில்லை.

இங்கோர் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வேலையும் இல்லாமல், வாழ்வாதாரமும் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்கு பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கும் வகையில் தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் போதிலும் அதை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதிக்கவில்லை.

தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறைக்கு உண்டு. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக வேலை இழந்து, சட்டப் போராட்டம் நடத்தி வரும் 187 தொழிலாளர்களுக்கும் நீதி கிடைக்க தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர்களுக்கு நீதி வழங்க நீதிமன்றமே ஆணையிட்டும் கூட, அதை செயல்படுத்த தொழிலாளர் நலத்துறை எதுவும் செய்யவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் துயரமே தொடர்கதையாகி விடக் கூடாது.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை  தலையிட்டு, இங்கோர் நிறுவனத்திடமிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 187 தொழிலாளர்களுக்கும் நீதிமன்றம் ஆணையிட்டவாறு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About pennalur factory workers issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->