சரித்திர பதிவேடு குற்றவாளி பிரபல ரவுடி படப்பை குணா கைது!
Notorious gangster Padappai Guna arrested
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணாவை போலீசார் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுர மங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த அனைத்து வழக்குகளும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளது .மேலும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி படப்பை குணா உள்ளார்.
இந்த நிலையில், மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை படப்பை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பாக மோகன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சுங்குவார்சத்திரம் போலீசார் ரவுடி குணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

ரவுடி படப்பை குணா பாஜக காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார். இவர் குண்டர் சட்டத்தில் கைதாகி 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Notorious gangster Padappai Guna arrested