என் உடம்பில் திராவிட ரத்தம்தான் ஓடுகிறது.. பாஜகவில் இருந்து நீக்கியதற்கு அண்ணாமலைக்கு நன்றி - சரவணன்.!
Dr Saravanan thanks to Annamalai for removed BJP
காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 6 பேரும் தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தியதோடு, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையையும் பல இடங்களில் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுரை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், நிதியமைச்சர் பிடிஆர்ரை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பாஜகவில் தொடர போவதில்லை. பாஜகவில் இருக்கும் மத அரசியல் எனக்கு பிடிக்கவில்லை என கூறிய நிலையில் தற்போது அவரை பாஜவில் இருந்து நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் P.சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சரவணன், என் உடம்பில் திராவிட ரத்தம் தான் ஓடுகிறது. பாஜக வில் இருந்து நீக்கியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி. பாஜகவில் மதம் சார்ந்த அரசியல் நடப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Saravanan thanks to Annamalai for removed BJP