தே.ஜ கூட்டணியின் ஆலோசனை கூட்டம்.. டாக்டர்.கிருஷ்ணசாமி பங்கேற்பு.!!
DrKrishnasamy participates in the NDA consultative meeting
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
அதேபோன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் நாளை பங்கேற்க உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜூலை 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் புது தில்லி ஓட்டல் அசோகாவில் மேதகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெறுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரல்ஹாத் ஜோஷி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஜே.பி.நட்டா அவர்களிடமிருந்து அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றுள்ளோம்.
எனவே, மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கலந்து கொள்ள உள்ளேன் என்பதை ஊடகம்/பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் இதன்மூலம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: காலை 08.30 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட உள்ளேன்" என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
DrKrishnasamy participates in the NDA consultative meeting