உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் மறைந்தார்!
Shyam Benegal death
இந்தியாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் (வயது 90) இன்று (டிச. 23) மாலை 6.30 மணியளவில் காலமானார்.
சிறுநீரக பாதிப்பால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் உயிரிழந்தார். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய ஷியாம் பெனகல் இன்று காலமானது இந்திய திரைத்துறையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1934ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிறந்த ஷியாம் பெனகல், இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர், திரைக்கதை ஆசிரியரான இவரின் ‘அங்கூர்’ திரைப்படம் இந்திய சினிமாவின் திருப்புமுனையாக அமைந்தது.
இவர் 900-க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களை தயாரித்து, பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரது படைப்புகள் பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளைப் பெற்றுள்ளன.
அவரது ‘மந்தன்’, ‘அரோஹன்’, ‘பூமிகா’, ‘ஜூனூன்’ போன்ற படங்கள் 7 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. 2023ல் வெளியான ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ திரைப்படம் வங்கதேசத்தின் முதல் அதிபரின் வாழ்க்கையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.