ஜெயக்குமார் கைது! அதிமுக தலைமை கண்டனம்.! - Seithipunal
Seithipunal


ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைக் கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வின் அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும், ஜனநாயகப் படுகொலையையும் தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை திடீரென்று காவல் துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளனர்.

ஜெயக்குமார், ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற மனப்பான்மையோடு, கள்ள ஓட்டு போடவந்த திமுக-வினரை தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்றும், இது எந்த வகையில் முறைகேடான செயல்? பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், அரசியலில் மிக மூத்த உறுப்பினராகவும் விளங்குகின்ற ஜெயக்குமார், கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதற்குண்டான முயற்சியை எடுத்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில், ஒரு இடத்தில் சட்ட விரோத செயலிலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலிலோ ஈடுபடுகின்ற ஒரு நபரைப் பிடித்து, அவர் தப்பி ஓடிவிடாதபடி கை கால்களைக் கட்டி காவல் துறையிடம் ஒப்படைப்பதை, தமிழ் நாட்டில் எத்தனையோ இடங்களில், இதற்கு முன் எத்தனையோ முறைகள் நடைபெற்றதை நாம் பார்த்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதைப் போலவே, கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்தபோது, அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி, காவல் துறையிடம் ஒப்படையுங்கள் என்று பொறுப்புடன் செயல்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தது நியாயம் தான் என்பதை தமிழ் நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அது, திமுக-வினரின் முறைகேடும், கள்ள ஓட்டும், அராஜகமும், அடாவடியும் நிறைந்த ஒன்று என்ற மனநிலை மக்களுக்கு ஏற்பட்டு, மிகக் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதை மூடி மறைக்கவும், இந்தத் தேர்தல் மூலமாக தங்களுக்கு அங்கீகாரம் வந்துவிடும் என்று நம்பிக்கொண்டு அதற்கேற்ற வகையில் முடிவுகளை மாற்றி அறிவிக்க திமுக முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே ஜெயக்குமாரை சட்ட விரோதமாக காவல் துறையினர் உதவியுடன், திமுக அரசு கைது செய்திருக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலையை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி கண்டித்து, மறு தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை எனவும்,  இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட திமுக தனது ஜனநாயக விரோதச் செயல்களை கைவிடாதிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளனர்.

திமுக-வின் இந்த அராஜகச் செயல்களையும், முறைகேடாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களையும், சட்டத்தின் துணை கொண்டு கழகம் எதிர்த்து நின்று முறியடிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அப்போது திமுக-வினர் காவல் துறையின் உதவியுடன் எந்த அளவிற்கு ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவார்கள் என்பதற்கு முன்னோட்டமாகவே ஜெயக்குமாரின் கைது அமைந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சலசலப்புகளைக் கண்டு அஞ்சுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது எனவும், வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் விழிப்புடன் இருந்து, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS and OPS Statement on Jayakumar arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->