எழுதாத பேனாவை கடலில் தான் வைக்கணுமா..? எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கேள்வி..!!
EPS question whether to put non-writing pen statue in sea
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் எழுதாத பேனாவை கடலில் தான் வைக்கணுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து விழா மேடையில் பேசிய அவர் "திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் கொண்டு வரவில்லை. திமுக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவருடைய அப்பாவுக்கு நினைவு மண்டபம் கட்டியுள்ளார். இவர் அப்பா பெயரில் மதுரையில் ஒரு நூலகத்தை கட்டி வருகிறார்.
இன்னொன்று எழுதாத பேனாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது, நீங்கள் பேனாவை வையுங்கள் எதுவும் சொல்லவில்லை, மறைந்த தலைவரைப் பற்றி பேசுவது முறையல்ல.
ஆனால் நீங்கள் பேனா வைப்பதற்கு அனைத்து தரப்பட்ட மக்களும் எதிர்க்கின்றனர். ஏன் கடலில் வைத்தால் தான், பேனா சிலை வைத்தது போல் இருக்குமா..? மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு முன்பு பேனா நினைவு சிலையை வையுங்களேன்.
பேனா நினைவு சிலையை ரூ.81 கோடியில் தான் வைக்க வேண்டுமா..? ரூ.2 கோடியில் பேனா சிலையை வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை மக்களுக்காக செலவு செய்யுங்கள். மக்கள் அதற்கு தானே உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்து உள்ளனர். அரசாங்க பணத்தை எடுத்து குடும்பத்திற்கு செலவு செய்து கொண்டுள்ளனர்" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
EPS question whether to put non-writing pen statue in sea