ஆறாத ஓடும் கள்ளச்சாராயம்.. பறிபோன பல உயிர்கள்.. திமுகவின் கைக்கூலி போராளிகள் எங்கே..? விளாசிய எடப்பாடி பழனிச்சாமி..!!
EPS questions Where are the militants who fought against alcohol
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழ்நாடுமுழுவதும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளும் கட்சி துணை போகிறது. சட்டமன்றத்தில் நான் இதுகுறித்து பேசிய பிறகாவது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 19 உயிர்கள் போயிருக்காது. ஆட்சி பொறுப்பேற்ற போது தேனாறும் பாலாறும் ஓடும் என சொன்னார்கள். ஆனால் இப்போது சாராய ஆறு தான் ஓடுகிறது. மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியால் போலி மதுபான விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த அரசாங்கமே போலி மதுபான விற்பனையை ஊக்குவிக்கிறது.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழகத்தில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த 2.0 எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பிறகு 3.0, மறுபடியும் கடந்த வாரம் 4.0. இப்படி திட்டங்கள் அறிவிப்பதோடு நின்று விடுகிறது உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. தமிழகத்தில் மதுபானம் அருந்த இந்த அரசாங்கம் ஆதரவு தருகிறது. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சாராயம் விட்டுக் கொள்ளலாம் என அனுமதிக்கிறது.
மால்களில் தானியங்கி இயந்திரத்தின் மூலமாக எந்த மது பாட்டில் வேண்டுமோ அந்த மது பாட்டிலை வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அரசாங்கமே மது விற்பனையை ஊக்குவிக்கிறது. ஆகவே மது குடிப்பவர்களை குறைப்பதற்கு பதிலாக மது குடிப்பவர்களை அதிகரிக்க செய்வதுதான் இந்த அரசாங்கம். இந்தத் துறையை கவனிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பாட்டலுக்கு 10% கமிஷன் வாங்குவதாக பல பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
ஒரு காணொளியில் ஒருவர் ஏன் மதுவை அதிகமாக வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு விற்பனையாளரே மேலிடம் வரை நான் பணம் கொடுக்க வேண்டும். அதனால் நான் அதிகமாக தான் வசூல் செய்ய வேண்டும் என சொல்கிறார். ஆக மது விற்பனையிலும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறெல்லாம் ஊழல் செய்வதால்தான் 30,000 கோடி பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு பணம் திருடியுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் சமூக போராளிகள் என கூறிக் கொண்டிருந்த பல பேர் சாராயத்தை பற்றி பாட்டு பாடினார்கள். அவர்களெல்லாம் இப்போது எங்கே போனார்கள் என தெரியவில்லை. இன்னும் பல சமூக போராளிகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கின்றார்களா.? என தெரியவில்லை. இவர்கள் அனைவருமே திமுகவின் கைக்கூலிகளாக அன்று செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
இன்று இவ்வளவு உயிர் போய் உள்ளது. இதுவரை எந்த சமூக போராளியும், எந்த நடிகரும் குரல் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி கூட இன்னும் வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டு இத்தனை உயிர்கள் போய் உள்ளது. நாட்டில் உண்டாகும் பிரச்சனைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வது தான் எதிர் கட்சிகளின் கடமை. அதைக் கூட செய்ய முடியாமல் தான் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்பதை கூறிக் கொள்கிறேன்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
EPS questions Where are the militants who fought against alcohol