பாஜகவுக்கு எதிராக மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்; எச்சரிக்கை விடுத்த செல்வப்பெருந்தகை..! - Seithipunal
Seithipunal


பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்இது குறித்து அவர்அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த  அறிக்கையில்  செல்வப்பெருந்தகை கூறப்பட்டுள்ளதாவது; 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஐந்து விசைப்படகுகளை பறிமுதல் செய்து 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை ராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஜனவரி 26ம் தேதி 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த பிப்ரவரி 5ம் தேதி 16 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.

அதில் 3 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 60 லட்சமும், மேலும் 16 மீனவர்களுக்கு ரூ 50,000 ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் கைது இருக்காது, படகுகள் பறிமுதல் இருக்காது என்று 2014 இல் கடல் தாமரை மாநாடு நடத்தி நீலிக்கண்ணீர் வடித்த பாஜகவினர் ஆட்சியில் தான் இத்தகைய தொடர் கைதுகள் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது. 

ஒன்றிய பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 3,544 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 6 முதல் 2 வருடம் வரையிலும் தண்டனை கைதிகளாக உள்ள 20 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் மீண்டும் 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு 140 கோடி மக்களை ஆட்சி செய்கிற பிரதமர் மோடி வெறும் 2 கோடி மக்களை ஆட்சி செய்கிற சின்னஞ்சிறிய அண்டை நாடான இலங்கை அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காணமுடியவில்லை என்றால் ஒன்றிய பாஜக அரசின் கையாளாக தனத்தை தான் வெளிப்படுத்துகிறது.

கடந்த காலங்களில் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட முற்றுகை நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் பகுதி தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை உணர்ந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் அனுமதி கோரினார்.

இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் 32 விசை படகுகள் மூலமாக நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் பகுதிக்கு இந்திய அரசு அனுப்பியது. அதை இலங்கை அரசு தடுத்த காரணத்தால் 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 6 இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக 25 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கை எல்லையை மீறி வான் வழியாக யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்கிற தமிழர்களுக்கு தலைவர் ராஜீவ் காந்தி வழங்கியதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நடவடிக்கையை ஆபரேஷன் பூமாலை என்று அழைக்கப்பட்டது.

தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய இலங்கை கூட்டுப் பணிக்குழு கடந்த நவம்பர் 5, 2016 அன்று அமைக்கப்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களுக்கு ஒருமுறை அக்குழு கூடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை அந்த கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 6 முறை தான் அந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-க்கு பிறகு கூட்டுப்பணிக்குழு கூட்டப்படவே இல்லை. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசுக்கு மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதில் அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. இக்குழு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார். 

எனவே, நடப்பாண்டில் மட்டும் 50 நாட்களில் 109 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 16 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fishermen will be gathered and held against the BJP Selvaperundakai warns


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->