திமுக அரசு செய்யும் திட்டமிட்ட சதி - குமுறும் விவசாயிகள்! பாஜக தரப்பில் பரபரப்பு அறிக்கை!
GK Nagaraj Say About keezhbhavani issue
கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு திட்டமிட்ட சதி என விவசாயிகள் குமுறல். முறையான பராமரிப்பை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "1951-ல் கட்டப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி தருகிறது.

65 ஆண்டுகாலமாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அதை முறைப்படி பராமரிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு 06.07.2022-ம் தேதி பாஜக விவசாய அணி முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டது. உடனடியாக திமுக அரசு தூர்வாரும் பணியை மேற்கொண்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்தது.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக ஏற்கனவே கட்டப்பட்ட கான்கீரிட் கட்டுமானத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் வாய்க்கால் நான்குமுறை உடைந்து தண்ணீர் வெளியேறியிருக்கிறது.
முறையான பராமரிப்பின்றி உடைப்பு ஏற்படும் இடத்தில் ஆரம்பகட்டத்திலேயே பொதுப்பணித்துறையினர் சரிசெய்யாமல் காலம் தாமதிப்பதே பெரிய உடைப்பு ஏற்படக் காரணமென அப்பகுதி விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

710 கோடியில் கான்கீரிட் போடும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருப்பதால் கரை உடைப்பை காரணம் காட்டி நீதிமன்றத்தில் அனுமதிபெறவே இதுபோன்ற திட்டமிட்ட சதியை திமுக அரசு மேற்கொள்வதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

அண்ணா திமுக ஆட்சியில் கால்வாய்க்கு கான்கீரிட் போடும் திட்டத்தை துவக்கியபொழுது, தடுத்துநிறுத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கான்கீரிட் போட துடிப்பது நிதிமுறைகேடு செய்யவே என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
எனவே திமுக அரசு போர்க்கால அடிப்படையில் கால்வாயின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேட்டுக்கடை கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை G.K.நாகராஜ் பார்வையிட்டார். அப்போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் C.K.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் V.C. வேதானந்தம், மாநில துணைத்தலைவர் தங்கராஜ்,விவசாய அணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர்கள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் உடன் வந்தனர்.
English Summary
GK Nagaraj Say About keezhbhavani issue