ஜெய்பீம் + ஆஸ்கர் = பித்தலாட்டம்: ஆஸ்கர் பட்டியலில் இருந்து ஜெய்பீம் துரத்தப்பட்டது ஏன்?! - Seithipunal
Seithipunal


சுற்றுசூழல் ஆர்வலர், பசுமைத்தாயகம் அருள் இரத்தினம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது,

"தமிழ் ஊடக உலகில் - பிறக்காத குழந்தைக்கு பேர் வைத்து, மொட்டையடித்து, காது குத்தும் அதிசயம்!

 'ஆஸ்கருக்கு தேர்வானது ஜெய்பீம்! ஆஸ்கர் சேனலில் வெளியானது ஜெய்பீம்! இது தமிழ்நாட்டுக்கே பெருமை!' – இப்படியெல்லாம் புரூடாக்கள் அள்ளி விடப்பட்டன. கடைசியில் தேர்வு பட்டியலுக்கு கூட போகாமல் வெளியே தள்ளப்பட்டுள்ளது ஜெய்பீம்!

இந்த விவகாரத்தில் நடந்த உண்மைகளை பார்ப்போம்.

உண்மை 1: அமெரிக்காவில் திரையிடப்படும் ஆங்கில ஹாலிவுட் படங்களுக்காகவே ஆஸ்கர் விருதுகள் தரப்படுகின்றன. அந்த விருதுக்கும் ஜெய்பீம் படத்துக்கும் மயிரிழை அளவுகூட தொடர்பு இல்லை.

உண்மை 2: ஆஸ்கர் விதிகளின்படி இந்தியப் படங்களை விருதுக்கு ஏற்பது இல்லை. இந்த விதியை 2020-ல் கொரோனா காரணமாக 'தற்காலிகமாக' திருத்தினார்கள். அதனால்தான், ஜெய்பீம் குழுவினரால் சாதாரணமான விண்ணப்பத்தைக் கூட அனுப்ப முடிந்தது. இது 'ஜெய்பீம் சிறந்த படம்' என்பதற்காக வந்த வாய்ப்பு அல்ல. கொரோனாவால் கிடைத்த வாய்ப்பு!

உண்மை 3: ஜெய்பீம் படத்தை ஆஸ்கர் குழுவினர் கேட்டு பெறவில்லை. ஞானவேல் கும்பல் ஒரு விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு, ஆஸ்கர் கிடைக்கப்போவதாக பீலா விட்டு, கட்டுக்கதைகளை பரப்பியது. இதில் எள் முனையளவும் உண்மை இல்லை.

உண்மை 4: ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், விண்ணப்பித்தப் படம் பற்றிய சிறிய தொகுப்பை 5000 டாலர் (ரூ.3,72,000) கொடுத்து ஆஸ்கர் சேனலில் வெளியிடலாம். அப்படி விலைகொடுத்துதான் ஆஸ்கர் சேனலில் ஜெய்பீம் காட்சிகளை வெளியிட்டார்கள். ஆனால், ஆஸ்கரே தேர்வு செய்து வெளியிட்டதாக பொய்ச்செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன.

உண்மை 5: ஆஸ்கர் சர்வதேச விருதுக்கு இந்திய நாட்டின் சார்பாக ஒரு படத்தை மட்டுமே அனுப்ப முடியும். அப்படி இவ்வாண்டு விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட படம் நயன்தாரா தயாரித்த 'கூழாங்கல்' எனும் தமிழ்ப்படம் தான். சூர்யாவின் ஜெய்பீம் அல்ல.

- மொத்தத்தில், 'ஜெய்பீம் ஆஸ்கருக்கு தேர்வானது' என்றும், அதற்கு 'விருதே கிடைக்கப் போகிறது' என்றும், 'ஆஸ்கரே தேர்வு செய்து ஜெய்பீம் காட்சிகளை யூடியூப் சேனலில் வெளியிட்டது' என்றும் தமிழ்நாட்டில் பரப்பப்பட்ட கதைகள் அத்தனையும் வெறும் கட்டுக்கதைகளே அன்றி, வேறல்ல.

ஜெய்பீம் கட்டுக்கதை & ஆஸ்கர் விருது  - விரிவாகக் காண்போம்

1. ஆஸ்கர் விருதுடன் ஜெய்பீம் தொடர்பு படுத்தப்பட்டது எப்படி?

ஆஸ்கர் விருது இந்தியப் படங்களுக்கானது அல்ல. அது ஹாலிவுட் மற்றும் ஆங்கில மொழி படங்களுக்கானது. இந்த விருதினை பெற முதலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். ஆஸ்கர் குழுவினர் தகுதியான படங்கள் பட்டியலை தேர்வு செய்வார்கள். அதன் பின்னர் வாக்கெடுப்பின் மூலம் விருது வழங்குவார்கள். இவ்வாறாக, விண்ணப்பம், தேர்வு, விருது என்று 3 நிலைகள் உள்ளன.

முதல் நிலையில், விண்ணப்பிக்க தகுதியுள்ள அனைத்து படங்களும் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவை நினைவூட்டல் பட்டியலாக வெளியிடப்படும். இந்தியப் படங்களை நேரடியாக விண்ணப்பிக்க 2020 வரை அனுமதி அளிக்கப்படவில்லை.

(ஆஸ்கர் சர்வதேச விருது எனும் பிரத்தியோக பட்டியலுக்கு ஒரு படத்தை மட்டுமே நாட்டின் சார்பாக அனுப்ப முடியும். இது தனி விருது ஆகும். பொதுவான பட்டியலுக்கு இந்தியப் படங்கள் விண்ணப்பிக்க முடியாது என்கிற ஆஸ்கர் விதிக்கு மாறாக, 2019-ல் நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தை நேரடியாக பொதுப்பட்டியலுக்கு அனுப்பி வைத்தார். அது இந்தியப் படம் என்பதால் நிராகரித்துவிட்டார்கள். காந்தி, சிலம்டாக் மில்லினியர் போன்ற இந்தியப் படங்களுக்கு - அவை ஆங்கிலப் படங்கள் என்கிற அடிப்படையில் தான் ஆஸ்கர் கிடைத்தது.)

2020 ஆம் ஆண்டில் கொரோனாவின் காரணமாக ஆஸ்கர் விதி தற்காலிகமாக திருத்தப்பட்டது. அதனால், 2020-இல் காலிரா அதித்தா (ஒடிய மொழி), சூரரைப் போற்று (தமிழ்) படங்களும், 2021-இல் மரைக்காயர் (மலையாளம்), ஜெய்பீம் (தமிழ்) படங்களும் விண்ணப்பித்தன. இவ்வாறு, கொரோனாவின் காரணமாக விதிகள் தற்காலிகமாக மாற்றப்பட்டதால் - மேற்கண்ட படங்கள் விண்ணப்பங்கள் பட்டியலில் இடம் பிடித்தன.

அதாவது, ஒத்தசெருப்பு படம் நிராகரிக்கப்பட்டதற்கும், காலிரா அதித்தா, சூரரைப் போற்று, மரைக்காயர், ஜெய்பீம் படங்கள் ஏற்கப்பட்டதற்கும் - ஆஸ்கர் விதிகளில் கொண்டுவரப்பட்ட தற்காலிக சலுகையே காரணம்.

இரண்டாம் நிலையில், ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் - விண்ணப்பங்கள் பட்டியலில் இருந்து, ஒவ்வொரு பிரிவிலும் 5 படங்களை விருதுக்காக தேர்வு செய்வார்கள். இதுதான் தேர்வு பட்டியலாகும். இந்தப் பட்டியலில் ஜெய்பீம் இடம்பெறவில்லை.

மூன்றாவது நிலையில், தேர்வுப்பட்டியலில் உள்ளப்படங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, ஒவ்வொரு பிரிவு வாரியாக அதிக வாக்குகளை பெற்ற படங்கள் ஆஸ்கர் விருதினை பெறும்.

இவ்வாறாக, ஆஸ்கர் 'தற்காலிக விதி மாற்றத்தின்' காரணமாக விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு, ஜெய்பீம் படத்துக்கு ஆஸ்கர் விருது என்கிற இல்லாத கட்டுக்கதையை தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஊடக பிரச்சாரமாகக் கட்டமைத்து விட்டனர்.

2. உண்மையிலேயே ஆஸ்கருக்கு போன தமிழ்ப் படம் எது?

தமிழ்ப்படங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை ஆஸ்கர் சர்வதேச விருது பட்டியலுக்கு தான் அனுப்ப முடியும். அதுவும் இந்திய நாட்டின் சார்பாக ஒரு ஆண்டில் ஒரு படத்தை மட்டுமே அனுப்ப முடியும். இவ்வாறு, இதுவரை 50-க்கும் மேற்பட்ட இந்திய படங்கள் ஆஸ்கருக்கு சென்றன. அவற்றில் பத்து படங்கள் மட்டுமே தமிழ்படங்கள் ஆகும். அவை:

தெய்வ மகன் 1969,
நாயகன் 1987,
அஞ்சலி 1990,
தேவர் மகன் 1992,
குருதிப்புனல் 1995,
இந்தியன் 1996,
ஜீன்ஸ் 1998,
ஹே ராம் 2000,
விசாரணை 2016,
கூழாங்கல் 2021

இவ்வாண்டு விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட படம் நயன்தாரா தயாரித்த 'கூழாங்கல்' எனும் தமிழ்ப்படம் தான். சூர்யாவின் ஜெய்பீம் அல்ல.

இவற்றில் எந்தப் படமும் தேர்வு பட்டியலுக்கு போகவில்லை.

(இந்தியாவிலிருந்து அதிகமாக ஆஸ்கருக்கு போன நடிகர் கமலஹாசன் தான்)

3. ஆஸ்கர் சேனலில் ஜெய்பீம் வெளியான கதை என்ன?

ஆஸ்கர் விருதுக்கு படங்களை விண்ணப்பித்த பின்னர், அந்தப் படம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காக சுறுக்கமான விளக்கப்படத்தை ஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிடுவதற்கு அனுமதி அளித்துள்ளனர். இதற்கு 5000 அமெரிக்க டாலர், அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 3,72,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த செய்தியை ஆஸ்கர் நிறுவனமே தெளிவாக Streaming uploads for Scene at the Academy may be purchased. Submission fee is $5,000 என்று குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு, விலை கொடுத்து செய்யப்பட்ட விளம்பரம் தான் 'ஆஸ்கர் சேனலில் ஜெய்பீம் வெளியான கதை' ஆகும்.

ஆனால், இதற்கு சப்பைக்கட்டு கட்டும் ஞானவேல் ராஜா, "நாங்கள் விண்ணப்பம் அனுப்புவதற்குதான் கட்டணம் செலுத்தினோம்" என்று கூறியுள்ளார். அதில் சிறிதளவும் உண்மை இல்லை. ஆஸ்கர் விருது இணையப் பக்கத்திலேயே, 'விண்ணப்பிக்க கட்டணம் இல்லை' என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.   (Is there an entry fee? There are NO entry fees to submit films in any category).

அதாவது, கொரோனா விதிவிலக்கு காரணமாக ஜெய்பீம் படத்தின் விண்ணப்பத்தை அனுப்ப முடிந்தது; விண்ணப்பத்தை இலவசமாக அனுப்புகிறவர்கள், காசு கொடுத்து படத்தை விளம்பரம் செய்யலாம் என்கிற வாய்ப்பை பயன்படுத்தி, விளம்பரம் செய்துள்ளார்கள். இதில் தகுதி, தேர்வு என்றெல்லாம் எதுவும் இல்லை.

(இதற்கும் சப்பைக்கட்டு கட்டும் சிலர், 3,72,000 ரூபாய் பணம் கட்டினாலும் ஆஸ்கர் சேனலுக்கு தேர்வு செய்ய மாட்டார்கள் என்று பீலா விட்டு, அதற்கு 'வெளியிடுவது எங்கள் விருப்பம்' என்கிற conditions apply பிரிவை காட்டுகின்றனர். இதுபோல 'டிக்கெட் வாங்கினாலும் அரங்கினுள் அனுமதிப்பது எங்கள் உரிமை' என்று நமது ஊர் சினிமா தியேட்டரில் கூடத்தான் conditions apply எழுதியிருப்பார்கள்).

இவ்வாறாக பணம் கொடுத்து ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்' படத்தை வெளியிட்டுவிட்டு, ஏதோ ஆஸ்கர் அக்காடமி விருது குழுவினரே தேர்ந்தெடுத்து வெளியிட்டது போன்று புரூடா விடுகின்றனர்.

வெட்கக் கேடு

தமிழ்நாட்டின் ஊடக உலகம் - ஒரு பொய்ச்செய்தி உலகமாக மாறிவிட்டதுதான் இதில் உள்ள மிகப்பெரிய சோகம் ஆகும். ஆஸ்கர் விருதுக்கு தொடர்பே இல்லாத 'ஜெய்பீம்' படத்தை ஆஸ்கர் பிரிவினரே தேர்வு செய்தது போலவும், 'ஆஸ்கர் கிடைக்குமா? கிடைக்காதா?' என்கிற பரபரப்பு விவாதமாகவும் ஆக்கி விட்டனர்!

இவ்வாறு, பிறக்காத குழந்தைக்கு பேர் வைத்து, மொட்டையடித்து, காது குத்தும் அதிசயம் தமிழ் ஊடக உலகில் மட்டுமே சாத்தியம்!

(குறிப்பு: கொரோனா காரணமாக, திரையரங்கில் வெளியாகாத படத்தை பிரத்தியோகமாக போட்டுக்காட்ட 12,500 டாலர் தனி கட்டணம், இந்த ஆண்டு மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதற்கும் படத்தின் தகுதிக்கும் தொடர்பு இல்லை)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeibhim fake Oscar issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->