சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா!...நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
Kalaignar centenary park in chennai chief minister mk stalin will inaugurate it tomorrow
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு நாளை மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை 2,600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்க்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம் 23 அலங்கார வளைவு பசுமை குகை சூரியகாந்தி கூழாங்கல் பாதை மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ 200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 எனவும், மாலை நேரத்தில் இசை நீரூற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.50, எனவும் கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kalaignar centenary park in chennai chief minister mk stalin will inaugurate it tomorrow