ஆங்கிலேயன் பயந்து நடுங்கிய தமிழனின் தனித்துவமான ஆயுதம்.! பூலித்தேவருக்கு உதவ மறுத்த கட்ட பொம்மு.!
katta bommu poolidevar
தமிழகத்தில், அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில், மருதநாயகத்தின் மறைவிற்குப் பின்னர், ஆங்கிலேயரின் அடக்கு முறை நேரடியாகவே நடைபெற்றது. ஆங்கிலேயரிடம் பீரங்கி உள்ளிட்ட நவீன ஆயுத பலம் இருந்தாலும், அவர்கள் பயந்தது, தமிழர்களின் ஒரு ஆயுதத்திற்கு மட்டுமே. அந்த ஆயுதத்தின் பெயர் வளரி. 147 டிகிரி வளைவு கொண்ட, இந்த வளைந்த வாள், கைப்பிடியுடன் சம எடையில் இருக்கும்.
இப்போது, நமக்கு தெரிந்த பூமராங் மாதிரி தான். ஆனால், இந்த ஆயுதத்தை முறையான பயிற்சி இல்லாமல் கையாள முடியாது. இந்த ஆயுதம், விஷ்ணுக் கடவுளின் கையில் இருக்கும் சக்கரம் போன்றது. இதனை சுழற்றி வீசும் போது, அது எதிர்ப்படும் நபர்களின் உடலையே, கழுத்தையோ சீவி விட்டு, பின் ஏவியவரிடமே வந்து சேரும்.
ஆங்கிலேயர் பயந்தது, இந்த வளரிக்குத் தான். இந்த வளரி எங்கிருந்து வருகிறது? யார் இதனை செலுத்துவது? என்பதைக் கூட உணர இயலாது. கொஞ்சம் அசந்தால், தலையே தனியாக விழும் ஆபத்தும் உண்டு. அந்தக் காலத்தில், பல பெண்கள் இந்த ஆயுதத்தை மிக லாவகமாகப் பயன்படுத்தினர்.
பூலித்தேவருக்கும், அவரது படையினருக்கும் இந்த வளரி ஆயுதம், கை வந்த கலையாக இருந்து, எதிரிகளைப் பதம் பார்த்தது. பூலித்தேவரின் இடையில், இந்த வளரி ஆயுதம் எப்போதும் இருக்கும். அதே போல், குத்து வாளை குறி பார்த்து வீசுவதிலும், பூலித்தேவர் தனித்திறன் பெற்றிருந்தார்.
பல போர்களில், வளரி ஆயுதம் பூலித்தேவருக்கு மிகவும் கை கொடுத்தது. தன்னை, எத்தனை எதிரிகள் சூழ்ந்தாலும், அதனைச் சமாளிக்கும் திறன், அவரது குத்துவாளுக்கும், வளரிக்கும் இருந்தது. 1750-ஆம் ஆண்டிலிருந்து, ஆங்கிலேயருக்கு வரி தர மறுத்து, தொடர்ந்து போரிட்டு வந்த பூலித்தேவனின் வாசுதேவநல்லுார் கோட்டையை, கைக் கூலிக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்த சிலரால், ஆங்கிலேயர் முற்றிலுமாக அழித்து விட்டனர்.
இந்த இக்கட்டான தருணத்திலும், மற்ற பாளையக்காரர்கள் யாரும் பூலித்தேவருக்கு போரில் உதவவில்லை. 1766-ஆம் ஆண்டு, “டிலாந்த்” என்ற பிரெஞ்சுப் படையின் தளபதி, நெற்கட்டாஞ்செவ்வல் பாளையத்தின் மீது படையெடுத்த போது, அருகில் இருந்த, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான, “ஜெகவீர பாண்டிய கட்ட பொம்மு”-விடம், உதவி கேட்டார் பூலித்தேவர். ஆனால், ஜெகவீர கட்ட பொம்மு உதவ மறுத்து விட்டார்.
1767- ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி, “கர்னல் டெனால்ட் காம்பெல்” என்ற ஆங்கிலேயன் தலைமையிலான படை, கொல்லங் கொண்டான் கோட்டையைத் தாக்கியது. தொடர்ந்து, வாசுதேவநல்லுாரிலும், ஒரே நேரத்தில் முற்றுகை தொடர்ந்தது. கடும் வறட்சியும், கோடை வெயிலுமாக இருந்த அந்த கால கட்டத்தில், கோட்டையை கைப்பற்றினார் காம்பெல். தனது படையினர் அனைவரையும், போரில் இழந்த பூலித்தேவர், சூழ்நிலையை உணர்ந்து, தன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைக் காட்டிற்குள் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
காட்டிற்குள், ஒரு சிறிய குடிசையை கட்டி, அதற்குள் தங்கி வந்த பூலித்தேவர், மக்களை ரகசியமாக சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஆங்கிலேயரை தொடர்ந்து எப்படி எதிர் கொள்வது? என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார். யாரும் பாதுகாவலர்கள் அற்ற அந்த நிலையில், அவருக்கு நம்பிக்கை தந்தது, அவரது வளரியும், குத்து வாளும் தான். ஆனாலும், விதியே சதி செய்தால், என்ன செய்வது?
தொடரும்.... இணைந்திருங்கள் எங்களோடு....