"மாவீரர் காடுவெட்டியார்" டிவிட்டரில் டிரெண்டிங் : நினைவுகூரும் வன்னியர் இன மக்கள்.!
MAAVEERANR KADUVETTIYAAR
வன்னியர் சங்கத் தலைவராகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ. குரு என்கின்ற ஜெ குருநாதன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
அவரின் பிறந்த நாளான இன்று சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் 'மாவீரர் காடுவெட்டியார்' என்ற ஹாஸ்டர்க் மூலம் வன்னியர் இன மக்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள (படை நிலை) காடுவெட்டி எனும் கிராமத்தில், கடந்த 1961ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாள் (1ஆம் தேதி) பிறந்தார்.
தந்தை ஜெயராமன் படையாச்சி, தாயார் கல்யாணி அம்மாள் ஆவார். ஜெ குருவின் தந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் உறவினர் ஆவார்.
பள்ளிப்படிப்பை கும்பகோணம் முடித்த ஜெ குரு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறு முதுகலைப் பட்டம் பெறுகிறார்.
1986ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் காடுவெட்டி கிளைச் செயலாளராக ஜெ குரு பதவி ஏற்கிறார். பின்னர் வன்னியர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை உணர்ந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி வன்னியர் சங்கத்தில் இணைகிறார்.
பின்னர் படிப்படியாக முன்னேறிய ஜெ குரு வன்னியர் சங்கத் தலைவராக பதவிக்கு வருகிறார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், அரியலூர் மாவட்டத்தில் மாற்று சமுதாய சமநிலையை கொண்டு வருவதற்காக 7 அம்பேத்கர் சிலைகளை திறந்து வைக்கிறார்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் இரட்டை குவளை முறையை ஒழித்துக் கட்டியவர் ஜே குரு ஆவார்.
வன்னிய குல சத்திரிய இளைஞர்களால் 'மாவீரன் குரு', 'காடுவெட்டியார்', மாவீரன், 'குரு அண்ணா; என்று அழைக்கப்படும் ஜெ குரு, பாமக வேட்பாளராக களமிறங்கி இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
வன்னியர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் இறுதிவரை போராடியவர் ஜெ குரு மீது இரண்டு முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, மே மாதம், 25ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெ குரு, சிகிச்சை பலனின்றி காலமானார்.