மிரட்டிய ஸ்டாலின், பணிந்த கமல்ஹாசன்..?! கணித்த தமிழிசைக்கு கண்டனம்!
MNM Condemn to BJP Tamilisai DMK MK Stalin
நடிகர் கமல்ஹாசன் ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தராஜனுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள், இன்று கமல் ஹாசன் அவர்கள் தனக்களிக்கப்பட்ட உலகநாயகன் என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசன் ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நின்று எம்பி ஆகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சௌந்தராஜன்.
இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர்.
கமல்ஹாசனின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். கமல்ஹாசன் மிரட்டலுக்கு அஞ்சுபவர் அல்ல என்பதை தமிழிசை அவர்கள், அவரது தலைவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல,
மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை டாக்டர் புரிந்து கொள்ள வேண்டும்.
கமல்ஹாசன் உலகநாயகன் பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு.
அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது" என்று முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Condemn to BJP Tamilisai DMK MK Stalin