நரகமாக மாறுகிறதா தமிழக அரசு மருத்துவமனைகள்? கமல்ஹாசன் கடும் கண்டனம்!
MNM Condemn to TNGovt Hospitals
சென்னையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். ஏழை, எளிய மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைகள் நரகமாக மாறுகிறதோ என்று எண்ணத் தோன்றும் வகையில், இச்சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் சிவ இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கால்பந்து வீராங்கனை. மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள இம்மாணவி, சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் மூட்டு வலி பிரச்சினைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற இவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவி, பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கால் அகற்றப்பட்டது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு உரிய இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் சமாளிக்க இயலாத அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் புகலிடம் அரசு மருத்துவமனைகள்தான். ஆனால், போதிய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைவு, போதுமான அளவுக்கு மருந்துகள் கிடைக்காதது, சுகாதாரமற்ற சூழல் என நரகமாய்க் காட்சியளிக்கின்றன அரசு மருத்துவமனைகள்.
அதையும் மீறி அரசு மருத்துவமனைகளை நாடுவோரிடம் காட்டப்படும் அலட்சியமும், புறக்கணிப்பும் நோயாளிகளை மட்டுமின்றி, அங்கு வரும் பொதுமக்களையும் வேதனைக்குள்ளாக்குகின்றன. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பொறுப்பற்ற மற்றும் மெத்தனப் போக்கு, விலை மதிப்பில்லாத உயிர்களைப் பழிவாங்குகிறது.
கால்பந்து வீராங்கனையின் சம்பவத்துக்குப் பிறகாவது, அரசு மருத்துவமனைகள் மாற வேண்டும். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்ற எண்ணத்துடனும், உரிய பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும். கடவுளுக்கு நிகராக கருதப்படும் மருத்துவர்கள், உயிர்களுடன் விளையாடும் போக்கை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்."
இவ்வாறு அந்த அறிக்கையில் சிவ இளங்கோ தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Condemn to TNGovt Hospitals