நவம்பர் 1 இறையாண்மை நாள்!...எப்படிக் கொண்டாடுவது?...திருமாவளவன் பரபரப்பு அறிக்கை!
November 1st sovereignty day how to celebrate thirumavalavan exciting report
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் ‘மாநிலம் உருவான நாளாக' மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல.
தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே, இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான 'உரிமை நிலமாக' எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை "தமிழர் இறையாண்மை நாளாக" விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.
கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 01ஆம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல "மாநில நாளைக்" கடைபிடிக்கலாம் என்று கேட்டோம். “நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தமிழர் இறையாண்மை நாள்’ என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
November 1st sovereignty day how to celebrate thirumavalavan exciting report