அதிகாரத்தை துஷ்பிரயோகம், சட்ட விரோத செயல்! திருச்சி எஸ்பி மீது இடும்பாவனம் கார்த்திக் புகார்!
NTK Idumbavanam Karthik complaint Against Trichy SP Varunkumar
திருச்சி புறநகர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.
அவரின் அந்த புகார் மனுவில், "நான் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில நிர்வாகியாக செயல்பட்டு வருகிறேன். திருச்சி புறநகர மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகிக்கும் வருண்குமார் ஐபிஎஸ் அவர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ன் சீமான் மீதும் அவதூறு பரப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன், தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி, தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 10.07.24 தேதி அன்று குற்ற எண் 34/2024, சைபர் கிரைம் போலீஸ் திருச்சிராப்பள்ளி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எங்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன் கைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட தனிப்பட்ட உரையாடல்கள், மூன்றாம் நபர்கள் மூலமாக சமூக வலைத்தளங்களில் மூலம் வெளியீட்டும், அதன் பின்பு மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட (குற்ற எண் : 21/2024) ரெட் பிக்ஸ் சேனல் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை 66 மணி நேரம் சட்ட விரோத காவலில் வைத்தும், தொடர்ச்சியாக தன் பதவியை துஷ்பியோகம் செய்து செயல்பட்டு வருகிறார்.
மேலும் அவரே அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்த குற்ற எண்: 544/24 வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கண்ணன் மற்றும் திருப்பதி ஆகிய நபர்களை இரவு முழுவதும் சட்ட விரோதமாக அடைத்து வைத்தும் பெண் காவலர்களை வைத்து கடுமையாக தாக்கியும் பெரும் மனித உரிமை மீறல் செயலை செய்துள்ளார்.
இதுவரை அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கத்தை எதிர்த்து குரல் எழுப்பி வரும் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் போன்ற பல்வேறு நபர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்தும் ஆளும் கட்சிக்கு தன் விசுவாசத்தை காட்டி வருகிறார்.
இதுவரை கிட்டத்தட்ட எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் அவருடைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தான், முன்பு பயன்படுத்திய “x” தளத்தின் கணக்கிலிருந்தும் மற்றும் அவருடைய வாட்ஸ் அப் மூலமாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை மறைமுகமாக மிரட்டி செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் 04.12.2024, தேதி என்று டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காவல் அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 36,00,000/- வாக்குகளைப் பெற்று மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் மத்திய பணியாளர்கள் சேவை விதிகளுக்கு எதிராகவும், நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று பேசியதன் மூலம் அவம் தமிழர் கட்சி மீது கொண்டுள்ள பெரும் காழ்ப்புணர்ச்சியும், அதீத வெறுப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே தொடர்ந்து தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் வருண் குமார் ஐபிஎஸ் அவர்களை அதே பதவியில் தொடர அனுமதித்தால், அவர் மேலும் தொடர்ச்சியாக மேற்கண்ட சட்ட விரோத செயல்களை செய்ய முற்படுவார்.
எனவே அவர் உடனடியாக தற்பொழுது வகித்து வரும், திருச்சி புறநகர் மாவட்ட கண்காணிப்பாளர் பதவியில்லிருந்து மாற்றப்பட வேண்டும். மேலும் அவர் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட எந்த பதிவிலும் நியமிக்கப்படாமல், நிர்வாகம் சார்ந்த பதவிலும் நியமிக்கப்பட்டால் தான் மேற்கண்ட தொடர் சட்ட விரோத செயல் பாடுகளை தடுக்க முடியும்.
எனவே மேற்கண்ட காரணங்களுக்காக, வருண்குமார் ஐபிஎஸ் அவர்கள் தற்போது வகித்து வரும் திருச்சி புறநகர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிலிருந்து மாற்றப்பட்டும், அவர் மீது தக்க விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இடும்பாவனம் கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
NTK Idumbavanam Karthik complaint Against Trichy SP Varunkumar