கண்ணீர் கடலில் 38 பேர்! அந்த செய்தியை கேட்டு மனவேதனையில் சீமான்! பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


குடும்ப வறுமை நீங்கவும், வாழ்வாதாரத்திற்காகவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டு தற்போதுவரை இலங்கை சிறையில் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் துயரச்செய்தி மனவேதனை அளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

1974 ஆம் ஆண்டு அம்மையார் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சட்டவிரோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட எந்த ஒரு நிலப்பகுதியையும் பிற நாட்டிற்கு வழங்க ஒன்றிய அரசு விரும்பினால் இந்திய நாடாளுமன்றத்திடமும், தொடர்புடைய மாநில அரசிடமும் ஒப்புதல் பெற வேண்டுமென இந்திய அரசமைப்பு விதி வரையறுக்கிறது.

ஆனால், அவற்றில் எந்த விதியையும் பின்பற்றாமல் சட்டத்திற்குப் புறம்பாக அம்மையார் இந்திராகாந்தி தன்னிச்சையாகத் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தார். அன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்ட ஐயா கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக அரசு அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கைபார்த்து பச்சைத்துரோகம் புரிந்தது. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததற்குப் பிறகுதான் இலங்கை கடற்படையால் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் கொடுமைகள் தொடங்கின.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி இராணுவம் சிறைபிடிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, படகுகள், மீன்களைப் பறித்துக்கொள்வது, உடைமைகளை அபகரித்துக்கொள்வது, வலைகள், படகுகளைச் சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்தி உயிர் பறிப்பது என அரங்கேற்றிய கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலும், தற்போதைய திமுக ஆட்சிக்காலத்திலும், அதேபோன்று இந்திய ஒன்றியத்தை காங்கிரசு ஆண்டபோதும், அதன் பிறகான பாஜக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்துவரும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எவரும் அணுவளவும் முயன்றதில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகார மாற்றம் எத்தனை முறை நிகழ்ந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் மட்டும் தொடர்கதையாகவே உள்ளது. அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது ஒப்புக்கு கடிதம் எழுதிவிட்டு, கடமை முடிந்ததாய் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்துபோவதுதான் இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்கள் கண்ணீர் கடலில் தத்தளிக்க முழுமுதற் காரணமாகும்.

ஆகவே, இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் 50 ஆயிரம் முதல் 2 இலட்சம்வரை இலங்கை நீதமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தண்டத்தொகைக்குப் பொறுப்பேற்றுச் செலுத்தி, 38 தமிழ் மீனவர்களையும், 87 படகுகளையும் சிறை மீட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை விரைந்து மீட்டு அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் மனிதப்பேரவலத்தை நிரந்தரமாய் தடுத்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

பறிக்கப்பட்ட படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், இலங்கை அரசால் விதிக்கப்படும் தண்டத்தொகையை அரசே ஏற்க வேண்டும், கட்சத்தீவை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவை அளித்து துணைநிற்பதோடு, மீனவர் நலனைப் பாதுகாக்க மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை விரைவில் முன்னெடுக்கும்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Condemn to Sri Lankan Govt Tamil Fisherman arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->