மேகதாது அணை விவகாரம்.. கூட்டணி முறிப்போம் என மிரட்டுங்கள்.. ஸ்டாலினை தூண்டி விடும் ஓபிஎஸ்.!!
OPS gives idea to MKStalin break Congress alliance for cauvery issue
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற நிலையில் அம்மாநில துணை முதலமைச்சர் பதவி டி.கே சிவகுமாருக்கு வழங்கப்பட்டது. மேலும் அவர் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசி அவர் மேகதாது அணை மற்றும் மகதாயி திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து விரைவில் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் உறுதியாக இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக விரைந்து செயல்பட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றத்தை அடுத்து 30.05.2023 அன்று நீர்ப்பாசன துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை மாதாந்திர அட்டவணையின்படி கர்நாடகம் அளிக்காத நிலையில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயலாகும். கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். அவரின் இந்த கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரை தடுத்து நிறுத்துவதற்கு சமம்.
கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது பற்றி முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதல்வருக்கு சொல்லி இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக உள்ள டி.கே சிவகுமார் எட்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல் மேகதாது பற்றி முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்லியிருப்பது யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் வேண்டும் என்று மேகதாது அணை திட்டம் குறித்து பேசி இருக்கிறார்கள் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். கர்நாடக துணை முதலமைச்சர் ஏதோ விபரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மேகதாது அணைத்திட்டம் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுக ஆட்சி. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரை பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கர்நாடகா அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேல் இடத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணைத்திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
OPS gives idea to MKStalin break Congress alliance for cauvery issue