உயர் கல்வியில் அதிமுக புரிந்த சாதனையை தான் புரிந்ததாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க.. ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


உயர் கல்வியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரிந்த சாதனையை தான் புரிந்ததாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது உயர் கல்வி தான் என்பதை நன்கு அறிந்து, கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என அனைத்துப் படிப்புகளிலும் புதிய பாடப் பிரிவுகளை துவக்கி, கூடுதல் இருக்கைகளை உருவாக்கி சாதனை படைத்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இந்த உண்மையை முற்றிலும் மறைத்து, தி.மு.க.வின் ஆட்சிக் காலம் கல்லூரியின் பொற்காலம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே பேசியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கியது. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் கல்விக்கு வித்திட்டார் என்றால் சத்துணவு திட்டத்தை • செயல்படுத்தி அதனை விரிவுபடுத்தியவர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழி வந்த மாண்புமிகு அம்மா அவர்கள் உயர் கல்வியை ஊக்குவித்தார்கள்.

மருத்துவக் கல்வியை எடுத்துக் கொண்டால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தான் 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியைப் பெற்ற பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசையே சாரும். மருத்துவப் படிப்பிற்கென தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான்.

பொறியியல் படிப்பை எடுத்துக் கொண்டால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்தான், திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. பொறியியலுக்கு என்று பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையே சாரும்.

சட்டப் படிப்பை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள 16 அரசு சட்டக் கல்லூரிகளில் திருச்சி, கோயம்புத்தூர், தர்மபுரி, விழுப்புரம், இராமநாதபுரம், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள எட்டு அரசு சட்டக் கல்லூரிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இது தவிர, சென்னையில் சீர்மிகு சட்டப் பள்ளி 2002 ஆம் ஆண்டும், திருச்சியில் தேசிய சட்டப் பள்ளி 2012 ஆம் ஆண்டும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ' தொடங்கப்பட்டது மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான்.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் 100 கோடி ரூபாய் மதிப்பில் அரசுப் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் கல்லூரிகள் துவக்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில். காலத்திற்கு தகுந்தவாறு, மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரக்கூடிய நூற்றுக்கணக்கான பாடப் பிரிவுகளை புதிதாக அறிமுகப்படுத்திய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

மீன் வளத்தை மேம்படுத்துவதற்காகவும், மீன் வளம் குறித்து மாணவ, மாணவியர் அதிகம் அறிந்து கொள்ளும் வண்ணமும், அதற்கென தனியாக தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இசை மற்றும் நுண் கலைகளை மேம்படுத்துவதற்கென தனியாக தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவரும் மாண்புமிகு அம்மா அவர்கள்தான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான், 2010-2011 ஆம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை 2019-2020-ல்' 51.4 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கைப்படி 2030 ஆம் ஆண்டு 50 விழுக்காட்டிற்கு மேல் உயர் கல்வி மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென்ற நிலையில், அதனை பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு எய்திவிட்டது என்றால், எந்த அளவுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கல்விக்கு, உயர் கல்விக்கு முன்னேற்றம் அளித்து இருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு ' உயர் கல்வி மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது என்பது மிகப் பெரிய சாதனை.

இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, திரு. கருணாநிதியின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்றும், தற்போதைய ஆட்சிக் காலம் உயர் கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே கூறி இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. ஒரு வேளை பிறர் செய்வதை தான் செய்ததாக சொல்லிக் கொள்வது ‘திராவிட மாடல்' போலும்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. பள்ளிக் கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி, அனைத்திலும் சாதனை படைத்த ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Statement on May 19


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->