நாங்கள் ஆட்சிக்கு வந்தால்., வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு இன்னும்.., அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
PMK Dr Anbumani Ramadoss Press meet Thiruvallur
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடிய பின், செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாவது, "தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும் என அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி கொண்டே இருக்கிறோம். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
குறிப்பாக சென்னை மாநகரத்தில் மழை நீர் வடிகால் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. காவிரி டெல்டா பகுதியில் இலட்சக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். வருகின்ற வாரத்தில் காவேரி டெல்டா பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன்.
மேலும் நமக்கு கிடைக்கின்ற மழையை நாம் சேமிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் பார்த்து வருகிறோம். இது சம்பந்தமாக எகிப்து நாட்டில் உலகளவில் COP27 மாநாடு நடைபெற்ற வருகிறது. எங்களுடைய யோசனைகளை தொடர்ந்து அரசுக்கு சொல்லிக்கொண்டு வருகிறோம்.
மிக முக்கிய யோசனையாக சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக 10 ஏரிகளை அரசு உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியும் ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியாக இருக்க வேண்டும்.
தற்போது சென்னைக்கு நான்கு ஏரிகள் நீர் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது போதுமானது இல்லை. சென்னை மாநகரத்திற்கு ஒரு ஆண்டுக்கு தேவையான குடிநீர் 15 டிஎம்சி ஆகும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அது 30 டிஎம்சியாக உயரும். இதற்கு நாம் இப்போதே புதிதாக ஏரிகளை உருவாக்க வேண்டும்.
தற்போது நாம் மழை நீரை வீணாக கடலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதை கட்டுவதற்கு அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் தவறி விட்டார்கள்.
ஏற்கனவே இருந்த தடுப்பணையும் உடைந்து பத்தாண்டுகள் ஆகியும் சீர் செய்யப்படவில்லை. திருவலங்காடு பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணையை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆனால் தற்போது பெய்த மழையில் அந்த தடுப்பணை சேதம் அடைந்து, மீண்டும் அதனை புதிதாக கட்டக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையை சார்ந்த பகுதியான இங்கு, பூக்கள் அதிகமாக விளைகிறது. இந்த பூக்களை பதப்படுத்தக் கூடிய தொழில் நிறுவனங்களை, தொழிற்சாலைகளை அரசு துவங்க வேண்டும். குளிர்சாதன கிடங்குகளை உருவாக்க வேண்டும். இதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எழுபது சதவீத வேலை வாய்ப்புகளை உள்ளூர் மக்களுக்கு கொடுக்க ஆணையிடுவோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அந்த முக்கியமான வாக்குறுதி நிறைவேற்றவில்லை. விரைவில் அவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டும்.
கோடிக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அண்மையில் 69 லட்சம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டு காலம் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இளைஞர்கள் வேலை இழந்து, ஊதியம் குறைக்கபட்டு, மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் சூழ்நிலையில், புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதை இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
PMK Dr Anbumani Ramadoss Press meet Thiruvallur