SC/ST கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்குங்கள் - மத்திய அரசுக்கு டாக்டர் இராமதாஸ் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பல வழக்குகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று அறிவித்தது. 

அதுமட்டுமின்றி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்; கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். 

அந்தத் தீர்ப்பு இன்று வரை செயல்படுத்தப்படாத நிலையில், பட்டியலின மக்களில் கிரீமிலேயர் பிரிவினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் மாளவியா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது தான் உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

எந்த ஒரு வகுப்பிலும் கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்பது தங்களின் எண்ணம் என்றாலும், அது குறித்து
கொள்கை முடிவு எடுப்பது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பது நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்திருக்கும் செய்தி.
உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் என்ற தத்துவமே
குறிப்பிடப்படவில்லை. இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி தான் ஓபிசி இட ஒதுக்கீட்டில் கிரீமீலேயர்
திணிக்கப்பட்டது. சமூகநீதிக்கு எதிரான இந்த கிரீமிலேயர் முறையை மத்திய அரசு நினைத்தால் உடனே அகற்ற முடியும்.

இந்தியாவின் இடஒதுக்கீட்டு நடைமுறையில் கிரீமிலேயர் முறை என்பது பிற்படுத்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூகநீதி வழங்குவதாக இல்லை. மாறாக, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் சமூகநீதியை மறுப்பதற்கான கருவியாகவே கிரீமிலேயர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் அறிமுகம் செய்யப்பட்டு 33 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. ஆனால், இன்று வரை கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான நேர்மையான வழிமுறை கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஒரு தரப்பினரை தகுதி இல்லை என்று நிராகரிக்கவும், தகுதி இருப்பதை மறுக்க முடியாவிட்டால் அவர்களை கிரீமிலேயர் முத்திரை குத்தி இட ஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றவும் தான் கிரீமிலேயர் முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 35 ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் இன்னும் 20% தாண்டவில்லை. கிரீமிலேயர் முறை உண்மையாகவே பயனளித்து இருந்தால், ஓபிசிகளுக்கான 27% இட ஒதுக்கீட்டில், மொத்தமுள்ள 2633 சாதிகளில் 983 சாதிகளுக்கு, எந்த பயனும் கிடைக்காத நிலையும், மேலும்  994 சாதிகளுக்கு, 2.66% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. அதனால், தான் பிற்படுத்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சமூகநீதி வழங்குவதற்கு சிறந்தத் தீர்வு உள் இட ஒதுக்கீடு தானே தவிர, கிரீமிலேயர் முறை இல்லை என பாமக வலியுறுத்துகிறது.

எந்த வகையில் பார்த்தாலும் ஓபிசி இட ஒதுக்கீடு என்ற அழகான ஓவியத்தில் இடைச்செருகலாக துருத்திக் கொண்டிருக்கும் கிரீமிலேயர் முறை அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Dr Ramadoss SC ST Reservation Central Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->