#சென்னை || சென்னை பூர்வகுடிகள் அகற்றம் - களத்தில் இறங்கிய பாமக தலைவர்.! - Seithipunal
Seithipunal


சென்னை : மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அந்த பகுதிகளை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று 60 வயதான கண்ணையா என்ற நபர், அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதியவர் தீக்குளித்த காரணத்தால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், போலீசார் வாகனம் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். தற்போது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி கே மணி நேரில் சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் முக நூல் பதிவில், "சென்னை மாநகராட்சி, மயிலாப்பூர் பகுதி, ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர் பகுதியில் வீடுகள் கட்டி வீட்டு வரி செலுத்தி,மின் இணைப்பு குடிநீர்,இணைப்பு பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் வீடுகளை இடித்து தள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டி பார்வையிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

பூர்வகுடிகள் அகற்றப்படுவது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில்  பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள்  வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல பத்தாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள்.  ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து  சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல்; அதை அனுமதிக்க முடியாது.

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை  அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தீக்குளித்த  கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும். படுகாயமடைந்த அவருக்கு  ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Head GK Mani visit gopalsamipuram area


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->