டாஸ்மாக் சந்து கடைகளை அரசு மூட வேண்டும் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt TASAMC
டாஸ்மாக் சந்து கடைகளை அரசு மூட வேண்டும், இல்லாவிட்டால் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமான டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 4829 என்று கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் கீழும் 4 முதல் 5 சந்து கடைகள் செயல்படுகின்றன.
இந்தக் கடைகளில் 24 மணி நேரமும் மது வணிகம் நடைபெறும். இந்தக் கடைகள் சட்டவிரோதமானவை. அவை எங்கெங்கு உள்ளன, அவற்றை நடத்துபவர்கள் யார்? என்ற விவரங்கள் அனைத்தும் காவல்துறைக்கு நன்றாகத் தெரியும்.
இந்தக் கடைகளை மூடுவதுடன், அவற்றை நடத்துபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்வதில்லை. அதற்குக் காரணம், அந்தப் பகுதியைச் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி காவல்துறைக்கும் மாமூல் தரப்படுவது தான்.
சந்து கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு மதுக் கடை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மது குடிக்க வேண்டும் என்றால், அதிக தூரம் செல்லத் தேவையில்லை, கைக்கெட்டிய தொலைவில் மது கிடைக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
அதனால் தான் மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மதுவுக்கு அடிமையாகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்து மதுக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த சந்துக் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt TASAMC