சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: திமுக கவுன்சிலருக்குத் தொடர்பா..?!
Police in Searching Of DMK Women Councillor in Salem ADMK Leader Murder
சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம். இவர் கடந்த ஜூலை 3ம் தேதி சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.
இது தொடர்பாக சேலம் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் திமுக பிரமுகர் சதீஷ்குமார் உட்பட 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சதீஷ்குமாரின் கூட்டாளிகள் தான் சண்முகத்தை கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனிடையே சதீஷ்குமாருக்கும், சண்முகத்துக்கும் சாலை ஒப்பந்தப் பணி எடுப்பது மற்றும் மாரியம்மன் கோவில் ட்ரஸ்ட்டியில் தலைவர் பதவி பெறுவதில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் சதீஷ்குமார் அரசு தடை விதித்துள்ள லாட்டரி விற்பனையும் செய்து வந்துள்ளார். இது குறித்து சண்முகம், சதீஷ்குமார் மீது போலீசில் புகாரளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகத் தான் சதீஷ்குமார் சண்முகத்தை சமயம் பார்த்து தீர்த்துக் கட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சதீஷ்குமாரின் மனைவியும், 55 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள தனலட்சுமிக்கும் இந்த கொலையில் தொடர்புள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் தாதகாப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அஜித், மகேஸ்வரன் உள்ளிட்டோரையும் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தில் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
English Summary
Police in Searching Of DMK Women Councillor in Salem ADMK Leader Murder