#BREAKING:: அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. செயற்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம்..!!
Resolution passed in working committee for AIADMK led alliance
அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று பிற்பகல் 1:30 மணி அளவில் நடைபெற்றது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருந்தன. குறிப்பாக எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 320 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 15 தீர்மானத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் குறித்தான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பயணிப்போம் எனவும், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுவரை சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமை தாங்கும் எனவும், நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைமை ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15வது தீர்மானத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கடுமையாக செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15வது தீர்மானம் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணியை மாற்றி அமைக்கும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தலைமையில் தான் கூட்டணி என கூறிவரும் நிலையில் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட கூட்டணி குறித்தான தீர்மானம் அண்ணாமலையின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
English Summary
Resolution passed in working committee for AIADMK led alliance