நல்லாட்சி என்றால் எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற மேலாடையை மறுத்தது அருவருக்கத்தக்கது! சீமான் கண்டனம்!
Seeman Condemn to DMK MK Stalin Thuppatta issue
தமிழ்நாடு முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் மாணவியரின் கருப்பு நிற மேலாடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் கருப்பு நிற உடையணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் கடும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அதீத பாதுகாப்பு காரணமாக கருப்பு நிற ஆடையைத் தவிர்க்கச் சொன்னதாக தமிழ்நாடு காவல்துறை அளித்துள்ள விளக்கம் ஒருபோதும் ஏற்க முடியாத சிறுபிள்ளைத்தனமாகும்!
கருப்பு நிற ஆடையைத் தவிர்ப்பதில் என்ன உயர் பாதுகாப்பு இருக்கிறது? கருப்பு நிற ஆடை அணிந்து வருவது மாணவ - மாணவியர்தானே? அல்லது தலைமறைவு பயங்கரவாதிகளா? நீட் தேர்வின்போது மாணவியரின் உள்ளாடையை அனுமதிக்க மறுத்த ஒன்றிய அரசின் செயலுக்கும், தற்போது கருப்பு நிற மேலாடைக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? இரண்டுமே அப்பட்டமான பாசிசப்போக்காகும்.
அப்படியே கருப்பு நிறம் மூலம் தங்களின் எதிர்ப்பினைத் தெரிவிக்க மாணவ-மாணவியர் முயன்றாலும், மாணவர்களின் உணர்வினைப் புரிந்து, அவ்வமைதி வழி எதிர்ப்பினை எதிர்கொள்ள ஆளுநருக்கும் முதல்வருக்கும் என்ன தயக்கம்? இனி வருங்காலங்களில் ஆளுநர், முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளில் கருப்பு நிறத்தில் எது இருந்தாலும் அதற்கெல்லாம் தமிழ்நாடு அரசு தடை விதிக்குமா? திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு என்றுகூறி ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற உடையணிந்து சபரி மலைக்கு செல்ல தடைவிதிக்குமா?
கருப்பு என்றால் எதிர்ப்பு, துக்கம் என்ற எதிர்மறை குறியீடு மட்டும்தானா? இதுதான் ஐயா பெரியார் வழி நடக்கும் திமுக அரசின் பகுத்தறிவுச் சிந்தனையா? ஆளுநர் ஆர்.என்.ரவியின் சிந்தனையும், திமுக அரசின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே எப்படி?
கருப்பு நிறம் எதிர்ப்பின் குறியீடு எனில் திமுக தனது கொடியில் உள்ள கருப்பு நிறத்தை எடுத்துவிடுமா? திராவிடக் கழகத்தின் அடையாளமே கருப்பு நிறம்தானே? இனி
பெரியாரிய நிழ்வுகளில் முதல்வர் பங்கேற்றால் பெரியாரியவாதிகள் கருப்புநிற ஆடை அணிந்து வரவாவது அனுமதி உண்டா? அல்லது அவர்கள் மேலாடை இன்றி வரவேண்டுமா? அல்லது மங்களகரமாக மஞ்சள் நிற ஆடை அணிந்து வரவேண்டுமா? ஒரு நிறத்தைக் கண்டு அரசு அஞ்சும் அளவிற்குதான் திமுக அரசின் செயல்பாடு இருக்கிறது.
கருப்பு நிறம் எதிர்ப்பின் குறியீடு என்று அஞ்சி மேலாடையை மறுக்கும் திமுக அரசின் செயலை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கிறது, அருவருக்கின்றது"என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman Condemn to DMK MK Stalin Thuppatta issue