கர்நாடகாவை போல் தமிழகத்திலும் அந்த சட்டம் இயற்றவேண்டும் - திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!
thirumavalavan say about Anti Superstition Act
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவிக்கையில்,
"மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். கர்நாடக மாநிலத்தில் கூட அந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் சார்பில் முன் வைத்திருக்கிறோம்.
முதல்வர் அவர்கள் அகில இந்திய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்கு ஒரு கூட்டமைப்பை உருவாக்க போவதாக அறிவித்திருந்தார். அதற்க்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக பாராட்டுகளை தெரிவித்து உள்ளோம்.
அரியலூர் மாணவி லாவண்யா பிரச்சனையில் மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் அவர்களின் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் நாங்கள் முன் வைத்துள்ளோம்.
முதல்வர், திமுகவின் தலைவர் ஸ்டாலினிடம் பொது தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகளை நியமன செய்கின்றபோது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.
இந்த தேர்தலிலும் முடிந்தளவுக்கு கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை அனைத்தும் முடிவு செய்யப்பட்ட பின்னர், 1-ஆம் தேதிக்குப் பிறகு வேட்புமனுத்தாக்கல் நடைபெறும்.
மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் 50 விழுக்காடு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கூடிய நிலைப்பாடு, போற்றுதலுக்குரியது." என்று திருமாவளவன் தெரிவித்தார்.
English Summary
thirumavalavan say about Anti Superstition Act